சேலம்: மேட்டூரை அடுத்த குஞ்சாண்டியூரைச் சேர்ந்தவர் பத்மராஜன் (60) . இவர் அதே பகுதியில் பழைய லாரி மற்றும் பேருந்து சக்கரங்களை புதுப்பிக்கும் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
இவர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்பதற்காக எல்லா வகையான தேர்தல்களிலும் வேட்புமனு தாக்கல் செய்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இவர், கடந்த 1988ம் ஆண்டு முதல் தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார்.
இந்திய அளவில் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை எதிர்த்தும் தேர்தலில் மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இவர் 'தேர்தல் மன்னன்' என்ற அடைமொழியோடு வலம் வருகிறார். கூட்டுறவு சங்க தேர்தல் முதல் ஜனாதிபதி தேர்தல் வரை வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால், இவரது சாதனைகள் லிம்கா புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில் இன்று தேர்தல் மன்னன் பத்மராஜன் 227-வது முறையாக வீரக்கல் பேரூராட்சி அலுவலகத்தில் 2-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.
வீரக்கல் பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரான ஜேம்ஸ் என்பவரிடம் அவர் வேட்பு மனுவை வழங்கினார். இது குறித்து பத்மராஜன் ,' வெற்றி தோல்வி இலக்கல்ல. அதிக தேர்தலில் போட்டியிட்ட நபர் என்ற வரலாற்றை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்பதே எனது லட்சியம்' என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: மருத்துவப் படிப்பை தன்வசமாக்கிய ஏழை மாற்றுத்திறனாளி மாணவி