சேலம் குகை பகுதியில் உள்ள வித்யாமந்திர் பள்ளி நீட் தேர்வு மையத்தை அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று(செப் 12) மதியம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது நீட் தேர்வால் தமிழ்நாட்டில் மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள் நடந்து வருகின்றன, நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், எதிர்காலத்திலும் நீட் தேர்வு நடைபெற கூடாது, நீட் தேர்வால் ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவு பறிக்கப்பட்டுள்ளது, மத்திய அரசு உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
இது குறித்து மாநிலத் தலைவர் பாரதி கூறியதாவது;
"ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவை பறித்து விட்ட நீட் தேர்வை உடனடியாக மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். அதற்கு மாநில அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும். நீட் தேர்வை தமிழ்நாடு அரசு ஆதரிக்கவில்லை என்று கூறிவிட்டு தற்போது நீட் தேர்வு நடத்த ஏற்பாடுகளை அரசு செய்து கொடுத்திருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நீட் தேர்வை எதிர்த்தார்.
சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படித்தவர்கள்தான் மருத்துவராக வேண்டும் என்று இந்த நீட் தேர்வு மூலம் மத்திய அரசு கூறுகிறது. தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான அரசுப் பள்ளிகளில் படித்த ஏழை எளிய மாணவர்கள் மருத்துவராக கூடாது என்பதே இப்போதைய நிலை. மக்களின் நலன் காக்க உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்யாவிட்டால் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மாநிலம் தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தும்" என்றார்.