காஞ்சிபுரம்:
பேரறிஞர் அண்ணாவின் 51ஆவது நினைவு நாளை முன்னிட்டு, அவரது சொந்த ஊரான காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு, அரசு சார்பில் அமைச்சர் பா.பென்ஜமின், மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் வாலாஜாபாத். பா கணேசன், அதிமுக நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டு, மலர் மாலை அணிவித்து மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும், திமுக சார்பில் மாவட்டச் செயலாளர் க.சுந்தர் தலைமையில் காஞ்சிபுரம் எம்.பி., செல்வம், திமுக மாணவரணி மாநிலச் செயலாளர் எழிலரசன், திமுக தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள், அண்ணா சிலைக்கு மலர்த்தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கடலூர்:
பேரறிஞர் அண்ணாவின் 51ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள அண்ணா சிலைக்கு திமுக, அதிமுக கட்சியைச் சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் முதன்முதலாக கடலூர் மஞ்சக்குப்பத்தில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு மாலையிட வந்த அதிமுகவினர் சிலை அசுத்தமாக இருந்ததுகூட கண்டுகொள்ளாமல் ஏனோதானோவென்று அப்படியே மாலையிட்டனர்.
இது அங்கு வந்த பொதுமக்கள் மற்றும் கட்சியினரியிடையே முகசுழிப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு வந்த திமுகவினர் சிலையைக் கழுவி, மாலையிட்டு அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
அண்ணாவின் பெயரிலேயே கட்சியின் பெயர் வைத்திருக்கும் அதிமுகவினரின் இச்செயல், பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம்:
பேரறிஞர் அண்ணாவின் 51ஆவது நினைவு தினமான இன்று தமிழ்நாடு முழுவதும் திமுக, அதிமுக, மதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் அனுசரிக்கப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக சேலம் மத்திய மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு ஊர்வலமாக வந்து மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதேபோல் அதிமுக, திமுகவினர் சார்பில் அறிஞர் அண்ணா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட அதிமுக, திமுக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், பகுதிச் செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: பேரறிஞர் அண்ணாவின் 51ஆவது நினைவு தினம் பல்வேறு இடங்களில் அனுசரிப்பு