சேலம்: சட்டமேதை அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, சேலத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அசாம்பாவிதங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற பாஜகவினர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது ஊர்வலமாக அங்கு சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்றனர்.
இதைக் கண்டு ஆத்திரமடைந்த பாஜகவினர், நீண்டநேரம் காத்திருந்த தங்களுக்கு அனுமதி வழங்காமல், திடீரென வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை அனுமதித்ததற்கு கண்டனம் தெரிவித்து, காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பாஜகவினர் மற்றும் விசிகவினர் ஒருவரையொருவர் எதிர்த்து, கண்டன கோஷங்கள் எழுப்பியதால் மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பாஜகவினர் அஸ்தம்பட்டி பிரதான சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து, இரு தரப்பினரும் தனித்தனியாக மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு சென்றனர்.
இதையும் படிங்க: மேலடுக்கு சுழற்சி: தென் தமிழ்நாட்டில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு