தமிழ்நாட்டில் விவசாய விளை நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பாக மாநிலம் தழுவிய சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் சங்ககிரி பழைய பேருந்து நிலையத்தில் விவசாயிகள் சங்க கூட்டியக்கத்தின் சங்ககிரி பகுதி செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் சாலைமறியல் போராட்டம் நடைப்பெற்றது. இந்த சாலை மறியலில் ஈடுபட்ட மூன்று பெண்கள் உட்பட 30 பேரை சங்ககிரி காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
இந்தப் போராட்டத்தால் சங்ககிரி பழைய பேருந்து நிலையம் பகுதியில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதே போல வாழப்பாடி, மேச்சேரி பகுதிகளிலும் விவசாய சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு மாற்று திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும் என வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டத்தில் விளை நிலங்களில் மீது உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படுவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஆற்காடு பேருந்து நிலையத்தில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: கஜா புயல் தாக்கி ஓராண்டாகியும் ஆறாத ரணங்கள்! OneYearofGaja