ஆத்தூர் அருகே பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (40). தொழிலதிபரான இவர் கடந்த திங்கட்கிழமை மாலை வீட்டிலிருந்து பணி நிமித்தமாக வெளியில் சென்ற பின் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ஆத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். உடனடியாக விசாரணையை முடுக்கிவிட்ட காவல் துறைக்கு, புதன்கிழமையன்று சுரேஷின் வாகனம் சேலம் அரசு தலைமை மருத்துவமனை அருகே நிறுத்தப்பட்டிருப்பதாகத் தகவல் கிடைத்தது.
வாகனத்தை கைப்பற்றிய காவல்துறை இது குறித்து துப்பு துலக்க ஆத்தூர் துணை கண்காணிப்பாளர் ராஜு, வாழப்பாடி துணை கண்காணிப்பாளர் சூரிய மூர்த்தி தலைமையில் இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு பல கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவந்தது. இந்த நிலையில் புதன்கிழமை (ஜூன் 19) இரவு 9 மணியளவில் சுரேஷ், சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பள்ளப்பட்டி காவல் நிலையம் வந்து தஞ்சமடைந்தார்.
இது குறித்து காவல் துறையினரிடம் சுரேஷ், பணத்திற்காகத் தன்னை சிலர் கடத்திச் சென்றதாகவும், காவல்துறையினர் தேடுவதை அறிந்த கடத்தல்காரர்கள் தன்னை சேலம் அருகே உள்ள அல்லிக்குட்டை என்ற பகுதியில் இறக்கிவிட்டுச் சென்றதாகவும் தெரிவித்தார்.
பின்னர் தான் சேலத்தில் உள்ளதாகத் தனது மனைவிக்குத் தெரிவித்துவிட்டு பேருந்து மூலம் காவல் நிலையம் வந்ததாகவும் குறிப்பிட்டார். இதனையடுத்து கடத்தல்காரர்களை காவல் துறையினர் வலைவீசித் தேடிவருகின்றனர்.