நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் தேர்தல் பறக்கும் படையினர் தமிழ்நாட்டில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை (பிப்ரவரி 12) சேலம் மாவட்டம் ரெட்டிப்பட்டி அருகில், தேர்தல் பறக்கும் படையினர், காவல் துறையினர் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த வழியாக சேலம் நோக்கிவந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தி அலுவலர்கள் சோதனையிட்டனர். அந்தச் சோதனையில், அந்தக் காரின் பின்புறத்தில் வைக்கப்பட்டிருந்த பையில் ஒன்பது கிலோ அளவுக்கு தங்க நகைகள் இருந்தது கண்டறியப்பட்டது.
அவற்றின் மதிப்பு ரூ.5 கோடியாகும். இது குறித்து தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் கூறுகையில், “சென்னை சவுகார்பேட்டையிலிருந்து சேலத்திற்கு காரில் வந்த சர்வான் சிங், பகான் சிங் ஆகியோர், தாரமங்கலத்தில் உள்ள நகைக் கடைக்கு நகைகளைக் கொண்டுசென்றுள்ளனர்.
சோதனையில் அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லை என்று தெரியவந்தது. இதனால் அவற்றைப் பறிமுதல்செய்து மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்துள்ளோம்” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: திருமண பந்தத்தை மீறிய உறவு: ஆம்பூரில் பெண் சந்தேக மரணம்!