சேலம் அடுத்த அரியலூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற தேசிய அளவிலான தற்காப்புக் கலை விளையாட்டுப் போட்டிகளில், இந்திய அளவிலிருந்து வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தியது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
அகில இந்திய அனைத்து தற்காப்புக் கலைகளுக்கான கூட்டமைப்பு சார்பில் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக இந்த ஆண்டும் சேலத்தில், சிலம்பம், கராத்தே, குங்ஃபூ, யோகா உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் தற்காப்புக் கலைகளைப் பயிலும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதுதொடர்பாக பேட்டியளித்த அகில இந்திய தற்காப்புக் கலைகள் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ஜெயக்குமார், ‘பள்ளி வயதிலிருந்து மாணவ மாணவியருக்குத் தற்காப்புக் கலைகளின் அவசியத்தை உணர்த்தவும், அதில் அவர்கள் பயிற்சி பெற்று உலகளவில் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களைப் பெற்று நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் வகையிலும் இந்த போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன.
இந்த தற்காப்புக் கலைப் போட்டிகளில் இந்த ஆண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் 8 வயது முதல் 18 வயது வரை இந்திய அளவிலிருந்து கலந்துகொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இங்கு முதலிடம் பிடிக்கும் வீரர் வீராங்கனைகள் விரைவில் சென்னையில் நடைபெற உள்ள உலக அளவிலான தற்காப்புக் கலைப் போட்டிகளில் பங்கு பெறுவதற்குத் தகுதி பெற்றவர்கள் என்பதால் போட்டி உற்சாகமாக நடைபெறுகிறது’ என்று தெரிவித்தார்.