மதுரை: கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. அந்த வகையில், மதுரையில் ஜனவரி 14ஆம் தேதி அவனியாபுரத்திலும், 15ஆம் தேதி பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதையடுத்து ஜனவரி 16ஆம் தேதி அலங்காநல்லூரில் நடக்கவிருந்தது. ஆனால், தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் போட்டி இன்றைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 7.30 மணியளவில் போட்டி தொடங்குகிறது. மாலை 5 மணி வரை 8 சுற்றுகளாக நடைபெற உள்ளது.
போட்டி நடைபெறுவதற்கு முன்பாக காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படஉள்ளது. அதேபோல வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெறும். அதன்பின்னரே அனுமதி வழங்கப்படும். ஒவ்வொரு போட்டியிலும் 50 வீரர்கள் களமிறக்கப்படுவர்.
அதிக காளைகளைப் பிடிக்கும் வீரர்கள், அடுத்தடுத்த சுற்றுக்குத் தகுதி பெறுவர். இறுதியாக பரிசாக கார் வழங்கப்படும். அதோபோல தேர்ந்தெடுக்கப்படும் காளை உரிமையாளுருக்கும் கார் பரிசாக வழங்கப்பட உள்ளது.
முன்னதாக, வாடிவாசலில் அவிழ்த்துவிடப்படும் அனைத்து காளைகளுக்கும், அதனைபிடிக்கும் வீரர்களுக்கும் தங்கக்காசு பரிசாக வழங்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். அதேபோல சிறந்த மாடு பிடி வீரருக்கான கார், சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஜல்லிக்கட்டு விழாவை ஒட்டி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கால்நடைத்துறை, மருத்துவத்துறை அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர். 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாலமேடு ஜல்லிக்கட்டு - புகைப்படத் தொகுப்பு