மதுரை: உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்படும் பொது நல மனுக்கள் விசாரணைக்கு உகந்ததல்ல என்று கருத்து கூறிய நீதிமன்றம், வண்டல் மண் அள்ளுவது குறித்து தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே பொன்னவராயன் கோட்டையைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், 'பொன்னவராயன் கோட்டையில் பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான புதுக்குளத்தில் வண்டல் மண் அள்ள ஊராட்சி மன்றத் தலைவர் கீதாஞ்சலி உரிமம் பெற்றுள்ளார்.
அவர், அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும், கூடுதலாக மண் எடுத்துள்ளார். பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான இடங்களில் தனி பயன்பாடு, விவசாயம், மண்பாண்டம் செய்வதற்கு மட்டுமே வண்டல் மண் அள்ளுவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.
இவ்வாறு எடுக்கும் மண்ணை விற்பனை செய்யக்கூடாது. ஆனால், ஊராட்சி மன்றத் தலைவரின் செயல்பாடால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என, மனுவில் கோரியிருந்தார்.
விசாரணைக்கு உகந்ததல்ல
இம்மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று(ஜூன்.29) விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஊராட்சி மன்றத் தலைவர் கீதாஞ்சலி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான குளத்தில் பத்து பேருக்கு வண்டல் மண் அள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஊராட்சி மன்றத் தேர்தலில் கீதாஞ்சலியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியைத் தழுவியவர்கள் தூண்டுதலின் பேரில், மனுதாரர் இம்மனுவை தாக்கல் செய்துள்ளார்" என்றார்.
இதைத் தொடர்ந்து மனுதாரர் தாக்கல் செய்திருக்கும் மனுவில் பொது நலன் இல்லை, உள்நோக்கத்துடன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: செல்பேசி பாதுகாப்பு பெட்டகம் மூலம் ரூ. 4.5 கோடி வருமானம்!