மதுரை: தமிழ்நாடு அரசு கொள்கை முடிவெடுத்து விநாயகர் சதுர்த்தி விழாவை தடைசெய்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதனை தடை செய்ய முடியாது என நீதிபதிகள் உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.
விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்ககூடாது என்ற அரசாணையை ரத்து செய்ய கோரி வழக்கறிஞர் ராமசாமி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு மீதான விசாரணை நீதிபதிகள் சத்தியநாராயணன் - ராஜமாணிக்கம் அமர்வு முன்பாக இன்று (ஆக.20) விசாரணைக்கு வந்தது.
அம்மனு குறித்து பேசிய நீதிபதிகள், ஒடிசாவில் பூரி ஜெகநாதர் கோயில் திருவிழாவிற்கு மாநில அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளை பொறுப்பேற்றுக் கொண்டு நடத்தியது. ஆனால், தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவினை பிறப்பித்துள்ளது எனவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
வருடத்தில் 365 நாட்களிலும் அனைத்து மத பண்டிகைகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. நூற்றாண்டு காலம் பழமை வாய்ந்த மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழா கூட இந்த முறை நடைபெறவில்லை அப்படி இருக்கும் பட்சத்தில் விநாயகர் சிலை வைக்க ஏன் அவசர படுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.
கரோனா பாதிப்பு ஏற்படாத வகையில் சுயக்கட்டுபாடுடன் விதிகளை மீறாமல் விநாயகர் சிலை வைப்பதற்கு ஏன் காவல் துறையின் பாதுகாப்பை நாடுகிறீர்கள் என்ற நீதிபதிகள், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கும் காரியத்தில், தமிழ்நாட்டை குறித்து மட்டுமே பேச வேண்டும் என்றும், பிற மாநிலங்களை உதாரணம் காட்டி பேசுவதை ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
அரசு அனுமதி வழங்கியுள்ள ஆண்டிற்கு 10 ஆயிரம் வருமானம் உள்ள சிறிய கோயில்களில் சென்று அங்குள்ள விநாயகரை வழிபட்டுக் கொள்ளுங்கள் எனக் கூறிய நீதிபதிகள், முன்னேறிய நாடுகள் கூட கரோனாவை கட்டுப்படுத்த திணறி வரும் நிலையில், இதுபோன்ற விழாக்களை நடத்துவது சிரமத்தை ஏற்படுத்திவிடும் எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.