மதுரை: தன்னுடைய வறுமை ஒழிப்பு சேவையைப் பாராட்டி 20 ஆண்டுகளுக்கு முன்னால், தனது காலில் விழுந்து வணங்கிய முன்னாள் பிரதமர் வாஜ்பாயியின் நினைவுகளை மிகுந்த நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார் மதுரையைச் சேர்ந்த பத்மஸ்ரீ சின்னப் பிள்ளை.
அப்போது, “வறுமை ஒழிப்புப் பணிகளில் முழு மன நிறைவு இருக்கிறது” என்றார்.
மதுரை மாவட்டம் அப்பன்திருப்பதி அருகே உள்ள பில்லுசேரி எனும் குக்கிராமத்தில் வசித்து வருகிறார் சின்னப் பிள்ளை. ஈடிவி பாரத் தமிழ்நாட்டுக்கு அவர் அளித்த சிறப்பு நேர்காணல் வருமாறு:-
களஞ்சியம் இயக்கம்
வறுமை, கந்துவட்டி, குடி, வரதட்சணை ஆகியவற்றிற்கு எதிராக எங்களது களஞ்சியம் இயக்கம் உருவானது. அந்த நோக்கத்திற்காகவே தமிழ்நாடு மட்டுமன்றி, ஆந்திரம், கர்நாடகம், பாண்டிச்சேரி, ஒடிசா உள்ளிட்ட 14 மாநிலங்களில் வறுமையால் பாதிக்கப்பட்ட மக்களிடம் தொடர் பரப்புரை மேற்கொண்டோம்.
எங்களால் இச்சமூகத் தளைகளிலிருந்து மக்களை முழுவதுமாக விடுவிக்க முடியவில்லை. என்றாலும், குறிப்பிடத்தக்க சாதனையை நாங்கள் செய்திருக்கிறோம். பல லட்சக்கணக்கான மக்களை வறுமையின் கொடுமையிலிருந்து மீட்டு கௌரவமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் செய்திருக்கிறோம்.
கந்துவட்டி, மது, வரதட்சணை
கந்துவட்டிக் கொடுமைகள் ஆங்காங்கு இப்போதும் தலைதூக்கத்தான் செய்கின்றன. எங்களது களஞ்சிய இயக்கத்தில் அதனை ஏறக்குறைய ஒழித்துவிட்டோம். அதேபோன்று மதுபோதைக் கொடுமையிலிருந்து ஆண்களை மீட்பதற்கு அனைத்து வகையான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
இதில் அரசின் ஒத்துழைப்பும் எங்களுக்குத் தேவையாக உள்ளது. வரதட்சணை குறித்த தொடர் பரப்புரை காரணமாக தற்போதைய தலைமுறையினரிடம் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளதை உணர்கிறோம்.
பெண்களுக்கு பொறுப்பு
என்னைப் பொறுத்தவரை 20 ஆண்டுகளுக்கு முன்பாகப் பார்த்த அதே சின்னப் பிள்ளையாகத்தான் இருக்கிறேன். எனக்கென்று தனியாக வேலை எதுவும் கிடையாது. களஞ்சியங்கள் தொடர்பாக அழைக்கப்படும் எந்தக் கூட்டத்திலும் பங்கேற்க சென்றுவிடுவேன். தற்போது கரோனா தொற்றுக் காலம் என்பதால் பெரும்பாலும் கூட்டங்கள் நடைபெறுவதில்லை. உடல்நிலை பாதிக்கப்பட்டு தற்போதுதான் வீடு திரும்பியுள்ளேன்.
களஞ்சியம் இயக்கத்தில் உள்ள பெண்மணிகள் அடுத்தடுத்து பொறுப்புக்கு வர வேண்டும். அவர்கள் இந்த இயக்கத்தை மேலும் வளர்த்தெடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வேண்டும் என பல முறை தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்திருந்தேன். என் மருமகள் எதேச்சையாக விண்ணப்பித்திருந்த அடிப்படையில் சத்துணவு மைய உதவியாளர் வேலை கிடைத்துள்ளது. அவர்கள் காட்டுகின்ற ஆதரவு காரணமாக ஏதோ என் பிழைப்பு ஓடுகிறது.
நாடே திரும்பி பார்த்த அந்த நிகழ்வு
அன்று விருது வழங்குவதற்காக வந்த மனிதர் (அடல் பிஹாரி வாஜ்பாய்) என்ன நினைத்தாரோ தெரியவில்லை, திடீரென எனது கால்களில் விழுந்து வணங்கினார். எனக்கு கை, கால்கள் எல்லாம் நடுங்கிவிட்டன. நான் பதறிப்போய் அவரைத் தூக்க முயன்றேன்.
அப்போது பக்கத்தில் தமிழ் தெரிந்த ஒருவர், உங்களுடைய சேவையை முழுவதுமாக அறிந்த பிரதமர், துர்க்கையின் வடிவமாகப் பார்க்கிறார். ஆகையால் காலில் விழுந்து வணங்கினார் என்றார். இரண்டு முறை எனது பெயரை உச்சரித்தார். ஒரு தேசத்தின் பிரதமரே என் காலில் விழுந்தது எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.
ஸ்த்ரீ சக்தி புரஸ்கார்
ஸ்த்ரீ சக்தி புரஷ்கார் விருது வாங்கிய நேரம் எனது வீடு குடிசைதான். எவரேனும் வீட்டிற்குள் வருவதாக இருந்தால் ஏறக்குறைய தவழ்ந்துதான் வர வேண்டும். அந்த அளவிற்கு மிகத் தாழ்ந்து இருக்கும். என் வீடு மட்டுமல்ல.
இங்கு இருந்த எல்லோரது வீடும் அப்படித்தான் இருந்தது. பிறகு போராடி என் காலனி மக்களுக்கு காங்கிரீட் வீடு பெற்றுத் தந்தேன். பத்து ஆண்டுகளுக்கு முன்பாகக் கட்டப்பட்ட வீடு. தற்போது ஒரு மழைக்குக் கூட வீடு தாங்க மறுக்கிறது. ஒழுகும் வீட்டில் ஒண்டுக் குடித்தனக்காரியைப் போல்தான் வாழ்ந்து வருகிறேன்.
கோரிக்கை
வீட்டின் மேற்கூரையும், பக்கவாட்டுச் சுவர்களிலும் ஆங்காங்கே பெயர்ந்து போய்க் கிடக்கிறது. அன்றாடம் காய்ச்சியைவிடக் கீழ்நிலையில் வாழ்கின்ற எனக்கு செலவு செய்து வீட்டைப் பராமரிக்கும் அளவுக்கு பொருளாதார வசதி கிடையாது.
ஆகையால் தமிழக அரசு தலையிட்டு வீட்டைச் செப்பனிட்டுத் தர வேண்டும்.
இவ்வாறு ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் மதுரை சின்னப் பிள்ளை கூறினார்.
என்றும் எளிமை
மதுரை சின்னப் பிள்ளை, மகளிர் சுய உதவிக்குழுக்களின் அடையாளமாக இன்றளவும் பார்க்கப்பட்டு வருகிறார். இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதும், மாநில அரசு ஔவையார் விருதும் வழங்கி கௌரவித்துள்ளது.
எனினும் அன்று போல் இன்றும் மிக எளிமையாக வாழ்ந்துவருகிறார். தன்னை பார்க்க வரும் நபர்களிடம் சிறுசேமிப்பின் அவசியம், மதுபோதை, கந்துவட்டி, வரதட்சணை கொடுமை பற்றி விவரிக்கிறார். பலருக்கும் வழிகாட்டியாய் திகழ்கிறார்.
இதையும் படிங்க: கணவனுக்கு தாஜ்மஹால் கட்டிய மனைவி!