மதுரை: கடந்த 1977 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் மதுரை டூ சென்னை பகல் நேர ரயிலாக தொடங்கப்பட்ட வைகை அதிவிரைவு ரயில் இன்று (ஆகஸ்ட் 15)45 வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. இதனையொட்டி ரயில் ஆர்வலர்கள் மற்றும் முன்னாள் ஓட்டுநர்கள் இணைந்து கேக் வெட்டி வைகை வண்டிக்கு பிறந்தநாள் கொண்டாடினர். மதுரை சந்திப்பு ஐந்தாவது நடைமேடையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ரயில் ஆர்வலர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த ரயில் ஆர்வலர் அருண்பாண்டியன் கூறுகையில், ‘பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க வைகை எக்ஸ்பிரஸ் ரயில், தென் மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்ததாகும். மீட்டர் கேஜ் ரயில் பாதையில் இந்தியாவிலேயே அதிவிரைவாக பயணித்த ரயில் என்ற பெருமை வைகை எக்ஸ்பிரஸ்க்கு உண்டு.
அது மட்டுமன்றி இந்திய ரயில்வே துறையால் பல்வேறு முதன்மையான விஷயங்கள் அனைத்தும் வைகை எக்ஸ்பிரஸில் தான் மேற்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது என்றார்.
வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்னாள் ஓட்டுநர் அய்யலு கூறுகையில், ‘தெற்கு ரயில்வேயில் 40 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன். வைகை எக்ஸ்பிரஸ் மீட்டர் கேஜ் மற்றும் பிராட் கேஜ் பாதைகளில் அதனை ஓட்டிய அனுபவம் உண்டு. நான் பணியாற்றிய காலத்தில் ஆயிரம் பேர் பயணம் செய்வர். தற்போது 2000க்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்ற அளவுக்கு வைகை எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ரயில் ஓட்டியதை பெருமையாக கருதுகிறேன்" என்றார்.
இதையும் படிங்க:75 ஆவது சுதந்திர நாளில் 45 ஆவது பிறந்தநாள் கொண்டாடும் வைகை எக்ஸ்பிரஸ்..