மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, வைகை ஆற்றின் இரு கரையிலும் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சியும் நெடுஞ்சாலைத்துறையும் இணைந்து இந்த பணியை மேற்கொண்டு வருகின்றன. வைகை ஆற்றின் இரண்டு புறமும் புகழ்பெற்ற படித்துறைகள் இருந்தன. அவை அனைத்தும் தற்போது அந்தந்த பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகின்றன.
பேச்சியம்மன் படித்துறை, திருமலைராயர் படித்துறை, ஓபுளா படித்துறை என பொதுமக்களால் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் இந்த பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலைகள் அமைக்கப்பட்டன. அப்போது அங்கிருந்த அனைத்து படித்துறைகளும் மண்ணில் மூடப்பட்டன.
தற்போது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை நகருக்குள் ஓடும் வைகை ஆற்றின் இரண்டு புறமும் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வரும் நிலையில், அப்பகுதியில் இருந்த படித்துறைகள் அனைத்தும் தோண்டப்பட்டு அவற்றில் இருந்த கற்கள் அனைத்தும் வெளியே எடுக்கப்பட்டன. அவற்றை மீண்டும் சாலை பணிக்காக ஜேசிபி கொண்டு மண்ணுக்குள்ளே போட்டு மூடி வருவது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பெரிய படிக்கற்களை பயன்படுத்தாமல் மீண்டும் மண்ணில் போட்டு மூடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என மாநகராட்சி அலுவலர்களிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.