மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே, கோயிலில் நுழைய அனுமதி அளிக்கப்படும் என நேற்று (டிசம்பர் 11) கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது.
கரோனா மூன்றாவது அலை தொற்றுத் தடுப்பின் ஒரு அங்கமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், அந்த அறிவிப்பை திரும்பப் பெறுவதாக கோவில் இணை ஆணையர் செல்லத்துரை இன்று (டிசம்பர் 12) அறிவித்துள்ளார்.
வழக்கம்போல் தரிசனம்
இதுகுறித்து, செல்லத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, "கரோனா மூன்றாவது அலை தொற்றுத் தடுப்பின் ஒரு அங்கமாக மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் வழிகாட்டுதலின்படி, கரோனா தடுப்பூசி இரண்டு தவணைகள் (டோஸ்) செலுத்தியவர்கள் மட்டுமே டிசம்பர் 13ஆம் தேதி (நாளை) முதல் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் மூலம் வெளியிடப்பட்ட அறிவிப்பு நிர்வாக காரணங்களுக்காக திரும்பப்பெறப்படுகிறது.
மேலும், பக்தர்கள் வழக்கம்போல், அனைவரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தடுப்பூசி போட்டவர்களுக்குத்தான் தரிசனம் தருவார் மீனாட்சி அம்மன்!