உசிலம்பட்டி அருகே உள்ள வாலாந்தூரைச் சேர்ந்த தனிக்கொடி என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ”எங்கள் ஊரான வாலாந்தூர் ஊராட்சிக்குட்பட்ட கருப்புக்கோயிலில் பொங்கல் விழா நடைபெற உள்ளது.
இதனையடுத்து அருகில் உள்ள செல்லப்பன் கோட்டை கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடத்த அனுமதி கோரி பொதுப்பணித் துறையினரிடம் அனுமதி கோரினோம். அவர்கள் அனுமதிக்க மறுக்கின்றனர். எனவே நீதிமன்றம் தலையிட்டு மீன்பிடித் திருவிழா நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கண்மாய் குடிநீர் ஆதாரத்திற்காகவும், பாசனத்திற்காகவும் உள்ளதால், அது பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அதனால் மீன்பிடித் திருவிழா நடத்த அனுமதி வழங்க இயலாது எனவும் தெரிவித்திருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.