மதுரை: மதுரை மாநகர் 65 வார்டு காஜா தெருவில் அமைந்துள்ள மூன்று மாடி கட்டடம் ஒன்று அடிமட்டத்தோடு கீழே சாய்ந்தது. இந்த விபத்தில் இருவர் காயமடைந்தனர். சாய்ந்து விழுந்த கட்டடத்தின் தரை தளத்தில் இரண்டு வீடுகள், இரண்டு கடைகளும், முதல் தளத்தில் இரண்டு வீடுகளும், இரண்டாம் தளத்தில் ஒரு வீடும் அமைந்திருந்தன. மொத்தமாக 10 பேர் இந்த கட்டிடத்தில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் கீழ்தளத்தில் ஏற்பட்ட சேதம் காரணமாக அந்த மூன்று மாடி கட்டிடம் திடீரென அருகில் உள்ள வீட்டின் மீது சாய்ந்தது விழுந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினரும், தெற்குவாசல் காவல் நிலைய ஆய்வாளர் வேதவல்லி தலைமையிலான காவலர்களும் வீட்டுக்குள் மாட்டிக் கொண்டிருந்த சிறுமியை காயமின்றி பத்திரமாக மீட்டனர்.
அதன் பின்னர் பெரியார் நிலைய தீயணைப்பு துறையை சேர்ந்த வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்பு படையினர் சாய்ந்து விழுந்த கட்டடத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக கட்டடம் இடிந்து விழுந்து இருக்கலாம் என தெரிய வந்துள்ளது.
கடந்த தீபாவளியன்று ஜவுளி கடை குடோன் இடிந்து விழுந்த விபத்தின் தழும்பு மாறாமல் இருக்கும் நிலையில், தற்போது மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதியில் மூன்று மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சீர்மிகு திட்டப்பணிகளின் பேரில் சீரற்று கிடக்கும் வேலூர்!