கரோனா நோய்க் கிருமித் தொற்று பரவலையடுத்து அறிவிக்கப்பட்ட ஊரடங்கு பல்வேறு தரப்பிலும் பெரும் பொருளாதார அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்திய பொருளாதாரத்தின் முக்கிய வருவாயாக திகழ்கின்ற சுற்றுலா துறையிலும் பேரிடியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களின் தலைகளால் நிரம்பி வழிந்த பல்வேறு சுற்றுலாத் தலங்கள் இன்று ஆளரவமற்று வெறிச்சோடிப் போய்க் கிடக்கின்றன.
சுற்றுலா வழிகாட்டிகளின் வாழ்நிலை...
அதைப்போன்றே சுற்றுலா வழிகாட்டிகளின் வாழ்வும் இன்றைக்கு திக்குத் தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. எந்த நாட்டில் இருந்து வந்தாலும் அவர்களோடு ஒன்று கலந்து இந்திய மற்றும் தமிழ்நாட்டு கலாசாரத்தின் மாண்பை விளக்கி மகிழ்ந்த அவர்களின் வாழ்வியல் இன்று மகிழ்ச்சிக்குரியதாக இல்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது.
யாராலும் கண்டுகொள்ளப்படாத ஒரு பகுதியினராகவே சுற்றுலா வழிகாட்டிகளின் வாழ்வாதாரம் புதைந்து கிடக்கிறது. ஓடிஓடி நமது பண்பாட்டை பகிர்ந்து வெளிப்படுத்திய இந்த கலாசார தூதுவர்கள் ஊரடங்கு என்ற ஒற்றை அறிவிப்பால் நிலைகுலைந்து கிடக்கிறார்கள்.
என்ன சொல்கிறார்கள் வழிகாட்டிகள்...
மதுரை மாவட்ட சுற்றுலா வழிகாட்டிகள் சங்கத்தின் பொருளாளரும் தனது டான்சிங் வழிகாட்டுதல் மூலமாக புகழ் பெற்றவருமான நாகேந்திர பிரபு கூறுகையில், வழிகாட்டி தொழிலை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு வாழ்கின்ற பலருக்கு இது ஒரு இருள் சூழ்ந்த காலகட்டமாகும். தமிழ்நாட்டில் மட்டும் 560 பேர் சுற்றுலா வழிகாட்டிகளாக உள்ளனர். இது மிகக் குறைந்த எண்ணிக்கை தான். காரணம் போதுமான வருவாய் இல்லாத காரணத்தால் இத்தொழிலை விட்டு நிறைய பேர் விலகிச் சென்றுவிட்டனர். இதைப் போன்றே இந்தியா முழுவதும் 5 லட்சம் பேர் இந்த தொழிலை செய்துவருகின்றனர். அவர்களுக்கும் கடும் பாதிப்பு தான் என்கிறார்.
சுற்றுலாத் துறையின் வருவாய்...
2018ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவிற்கு வருகை தந்த மொத்த வெளிநாட்டு பயணிகள் 93 லட்சத்து 67 ஆயிரத்து 424 பேர், இதன்மூலம் ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 846 கோடி ரூபாய் அந்நியச் செலாவணியாக ஈட்டப்பட்டுள்ளது. அதேபோன்று 2017ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் 1652.5 மில்லியன் பேர் ஆவர். ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக மூன்றில் இருந்து ஆறு விழுக்காடு வரை சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 2018ஆம் ஆண்டில் உள்ளூர் பயணிகள் 3 ஆயிரத்து 859 லட்சம் பேரும் வெளிநாட்டு பயணிகள் 61 லட்சம் பேரும் வருகை தந்துள்ளனர். உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 2014ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை இந்தியாவிலேயே முதல் இடத்தைப் பெற்ற மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரையைச் சேர்ந்த மற்றொரு சுற்றுலா வழிகாட்டி உஷா மேரி கூறுகையில், கரோனா காலத்து ஊரடங்கில் வழங்கப்படுகின்ற தற்காலிக நிவாரணத்தை காட்டிலும் நிரந்தர தீர்வை அரசாங்கம் எங்களுக்கு வழங்க வேண்டும் அக்டோபர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை எங்களுக்கான பணி வாய்ப்புகள் இருந்தாலும் மீதமுள்ள ஆறு மாதங்கள் வீட்டில் தான் முடங்கிக் கிடக்க வேண்டிய நிலை இதனை தவிர்க்க கீழடி போன்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களில் எங்களைப் போன்ற சுற்றுலா வழிகாட்டிகளை பணியமர்த்தி பொது மக்களுக்கு சேவை செய்ய தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்” என்றார்.
முடிவு தான் என்ன...
சுற்றுலா வழிகாட்டிகளில் பலர் எல்லா மொழிகளும் தெரிந்தவர்களாக இருந்தாலும் தற்போதைய கரோனா காலத்து ஊரடங்கை சமாளிக்கிற பொருளாதார வழி அறியாதவர்களாகவே உள்ளனர். காரணம் இப்படி ஒரு கொள்ளை நோய் வரும் என்றும், அதனால் நாம் கடுமையாக பாதிக்கப்படுவோம் என்ற பார்வை எப்படி அரசுகளுக்கு இல்லாமல் போனதோ; அதை போலவே இவர்களுக்கும் இல்லாமல் போனது தான் எதார்த்தம்.
கையைப் பிசைந்து கொண்டு நிற்கும் இந்த வழிகாட்டிகளின் வாழ்வியலுக்கு சுற்றுலா துறையும், தமிழ்நாடு அரசும் நிச்சயம் ஒரு வழியை காட்டத்தான் வேண்டும் என்பது தான் இத்தொகுப்பின் மூலம் அவர்கள் வேண்டுவது.