அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி திருக்கோவில் கார்த்திகை தீபத் திருவிழா, பத்து நாட்கள் நடைபெறும். முதல் நாளான இன்று காலை கோவில் கம்பத்தடி மண்டபத்தில் உள்ள தங்க முலாம் பூசப்பட்ட 30 அடி உயர கொடிக்கம்பத்தில், பக்தர்களின் அரோகரா முழக்கத்துடன் கார்த்திகை தீபத்திருவிழா கொடி ஏற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கொடிக்கம்பத்திற்கு நீராட்டு செய்யப்பட்டு சுப்பிரமணியசாமி, தெய்வானைக்கும் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. கார்த்திகை தீபத்திருவிழாவின் 10 நாள் நிகழ்ச்சிகளும் கோவில் வளாகத்திற்குள்ளேயே நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான பட்டாபிஷேக நிகழ்ச்சி, வரும் 28 ஆம் தேதியும், மலைமேல் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி 29 ஆம் தேதியும் நடக்க இருக்கிறது.
கரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், இன்றைய நிகழ்ச்சியில் குறைந்த அளவிலான பக்தர்களே அனுமதிக்கப்பட்டனர். அதேபோல், மலைமேல் தீபம் ஏற்றும் நிகழ்ச்சிக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: 'கோவையில் வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்கக் கூடாது'