திருமங்கலம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புளியங்குளம் அருகே இன்று அதிகாலை 3 மணியளவில் திருநெல்வேலியில் இருந்து மதுரை நோக்கி வந்த அரசுப் பேருந்தும் மதுரையில் இருந்து திருமங்கலம் நோக்கி சென்ற சிவப்பு ஹூண்டாய் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் கடுமையாக சேதமடைந்ததில் அதில் பயணித்த மூன்று பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து தகவலறிந்து தீயணைப்பு துறையினரும் நெடுஞ்சாலை பாதுகாப்பு காவல்துறையினரும் விரைந்து வந்து உயிரிழந்த நபர்களின் உடலைகளை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பிவைத்தனர்.
விபத்து குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இறந்தவர்கள் திருமங்கலத்தைச் சேர்ந்த பிரசன்னகுமார் (26,) மதுரை பொன்மேனியைச் சேர்ந்த தினேஷ் (26) மற்றும் குணா (23) என்றும் மேலும் அவர்கள் மூவரும் புகைப்படக் கலைஞர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
இதில் தினேஷ் அவரது நண்பர்களுடன் நேற்று இரவு பிறந்தநாள் கொண்டாடிவிட்டு மதுரையிலிருந்து பிரசன்னகுமாரை திருமங்கலத்தில் இறக்கி விடுவதற்காக காரில் வந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது என காவல்துறையினர் கூறியுள்ளனர். விபத்து குறித்து வழக்குப்பதியப்பட்டு விசாரணை செய்யப்பட்டுவருகிறது.
மேலும் படிக்க: கார் - லாரி சாலைவிபத்து - இருவர் உயிரிழந்த சோகம்