கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மத்திய, மாநில அரசுகளால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டன. அதனால், வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலாத் தலங்கள், பள்ளி, கல்லூரிகள் என மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மூடப்பட்டன. தற்போது வைரஸ் தாக்கம் படிப்படியாக குறைந்துவருதால், மூடப்பட்ட அனைத்தும் மீண்டும் படிப்படியாகத் திறக்க அனுமதிக்கப்பட்டுவருகின்றன.
அவ்வாறு தமிழ்நாடு தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நினைவுச் சின்னங்களும், கட்டடங்களும், அருங்காட்சியகங்களும் பொதுமக்களின் பார்வைக்குத் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதனடிப்படையில், இன்று மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை பொதுமக்களின் பார்வைக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது.
முன்னதாக அரண்மனையின் பல்வேறு பகுதிகளில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு சுத்தம்செய்யப்பட்டது. தற்போது அரண்மனைக்குள் வரும் சுற்றுலாப் பயணிகள் உடல் வெப்பநிலை கண்டறியும் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்படுகின்றனர். அனைவரும் முகக் கவசங்களுடன் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஊரடங்கு காலத்தில் திருமலை நாயக்கர் அரண்மனையில், சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் தற்போது மஹால் புதுப் பொலிவுடன் காட்சி அளிக்கிறது.
இன்றுமுதல் நாள்தோறும் மாலையில் ஆங்கிலம், தமிழில் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. குறிப்பாக இன்றுமுதல் நாளிலேயே ராஜஸ்தான் மாநிலச் சுற்றுலாப் பயணிகள் வருகைதந்திருந்தனர்.
இதையும் படிங்க: 'ஒலியும் ஒளியும் இன்று இலவசம்' - மதுரை நாயக்கர் மகால் ரசிகர்களுக்கு அரிய வாய்ப்பு!