கோவிட்-19 பெருந்தொற்று நாடு முழுவதும் பரவி வருவதையடுத்து மத்திய, மாநில அரசுகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. இச்சூழலில் உலகப் புகழ்பெற்ற மீனாட்சியம்மன் திருக்கோயிலில் கடந்த ஒரு வாரமாக கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருக்கோயிலில் சளி, காய்ச்சலுடன் வரும் பக்தர்களுக்கு முகமூடி வழங்குவது, மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்காக திருக்கோயிலில் மருத்துவக்குழுவும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து திருக்கோயிலில் அம்மன், சுவாமி சன்னதி உள்ளிட்ட அனைத்து சன்னதிகள், பக்தர்கள் வரிசையில் செல்லும் பகுதிகள், நடைபாதைகள், பொற்றாமரைக் குளப் படிக்கட்டுகள், பக்தர்கள் இருக்கைகள், திருக்கோயில் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் உதவியுடன் கிருமி நாசினி தெளிக்கும் பணி மூன்று நாள்களுக்கும் மேலாக நடைபெற்றது.
இதையடுத்து கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டமும் திருக்கோயிலில் நடைபெற்றது. இதில் திருக்கோயில் பணியாளர்கள், திருக்கோயில் காவல் நிலைய காவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். இதில் கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விளக்கப்பட்டன. இவ்வேளையில் புதன்கிழமை முதல் திருக்கோயிலுக்கு தரிசனத்துக்கு வரும் பக்தர்களின் உடற்சூட்டைக் கண்டறியும் தெர்மல் டிடெக்டர் கருவி மூலம் காய்ச்சல் பரிசோதனை நடத்தப்படுகிறது.
இதில் சராசரி உடல் வெப்பமான 100 டிகிரிக்கும் அதிகமான வெப்பம் இருக்கும்பட்சத்தில், அந்த பக்தர்கள் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். மேலும் 100 டிகிரிக்கும் அதிகமான காய்ச்சல், சளி, இருமல் தொந்தரவுடன் வரும் பக்தர்கள் திருக்கோயில் வாயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அவசர ஊர்தி உதவியுடன் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
திருக்கோயிலின் நான்கு கோபுர வாயில்களிலும் பரிசோதனை நடத்தப்படுவதுடன், திருக்கோயிலின் உள்ளே பல்வேறு இடங்களில் கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.