மதுரை நெல்லை வீதியை சேர்ந்த மோகன் என்பவர், அதே பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். மேலும் நிலம், வீடு வாங்கி விற்கும் தொழிலும் செய்து வருகிறார். இவரிடம், தாசில்தார் நகரை சேர்ந்த ஹக்கீம் என்பவர், தனக்கு சொந்தமான மருந்து நிறுவனத்தில் மோகனை பங்குதாரராக சேர்ப்பதாக கூறி, கடந்த 2012ஆம் ஆண்டு இரண்டரை லட்சம் ரூபாய் கடன் பெற்றார்.
அதே பகுதியைச் சேர்ந்த சையது என்பவர் மோகனிடம் வீடு கட்டுவதாக கூறி ஒரு லட்சம் ரூபாய் கடன் பெற்றார். இருவரிடமும் மோகன் பல முறை கேட்டும் கடன் தொகையை திருப்பி கொடுக்கவில்லை. இதனிடையே ஹக்கீம், சையது, மதுரை தேவர் நகரை சேர்ந்த செல்லத்துரை ஆகியோர் 24.5.2013 அன்று மோகனை அரிவாளால் தாக்கி, தங்க செயினை பறித்து, செக் புத்தகம், ஏடிஎம் கார்டு, வீட்டில் இருந்த 15 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றனர்.
மேலும், மோகனை கடத்திச் சென்று சிவகங்கை மாவட்டம், மருதுபட்டி கண்மாய்க்குள் வைத்து அடித்து, உதைத்து, வெற்று பத்திரம், காசோலைகளில் கையெழுத்து வாங்கி விட்டு தப்பிச் சென்றனர். இதையடுத்து, மதுரை கருப்பாயூரணி காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க சென்ற மோகனை, காவல்துறையினர் துன்புறுத்தி புகாரை பெற மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால், மதுரை ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஹக்கீம், செய்யது, செல்லத்துரை மற்றும் காவல் ஆய்வாளர் பாலமுருகன், காவல் கண்காணிப்பாளர்கள் ஞானகமாலியேல், பாலமுருகன் ஆகியோர் மீது கொலை முயற்சி, ஆள் கடத்தல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் மோகன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றஞ்சாட்டப்பட்ட அனைவருக்கும் சம்மன் அனுப்பி உத்தரவிட்டார். ஆனால், நீதிமன்றத்தில் காவலர்கள் ஆஜராகாததால் ஞானகமாலியேல், பாலமுருகன் உள்ளிட்டோர் மீது பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜனவரி 30ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.