தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த பழனியாண்டி உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதில், "தமிழ்நாடு உணவகம் தொழிலாளர் நலச் சங்கத்தின் செயலாளராக உள்ளேன். தமிழ்நாட்டில் உணவகம், தேநீர்க் கடைகள், உணவுத் தின்பண்ட விற்பனை நிலையங்கள், தங்கும் விடுதிகள், விருந்து சமைப்பவர்கள் எனப் பல லட்சம் பேர் முறையாகப் பதிவுசெய்யாமல் உள்ளனர்.
உணவகம் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும், பொதுவான ஊதியம், பணியிடம் சார்ந்த நல விதிகளைத் தொழிலாளர் துறை செயல்படுத்துகிறது. ஆனால் மற்ற தொழில் நிறுவனங்களுக்கும், உணவுப்பொருள் சார்ந்த உணவகம் தொழில்சார்ந்த நிறுவனங்களுக்கும் பல்வேறு வேறுபாடுகள் உள்ளன.
ஊழியர்களின் பணிநேரம், பணிச்சுமை, குறைந்தபட்ச ஊதியம், சரியான இடைவெளியிலான ஊதிய உயர்வு, அவசரகால ஊதியத்துடன் கூடிய விடுப்பு, பணி பாதுகாப்பு நடவடிக்கைகள், விபத்து இழப்பீடு உள்ளிட்டவைக்கான ஒழுங்குப்படுத்தப்பட்ட நடைமுறைகள் எதுவும் இல்லை.
ஆனால் தொழிலாளர் நலத் துறை சார்பில் பல்வேறு துறைகளிலுள்ள தொழிலாளர்களுக்கு, அரசுத் துறை சார்பில் இலவச காப்பீடு, மருத்துவ உதவிகள், இலவச மனை பட்டாக்கள் உள்ளிட்ட பல நலத்திட்ட உதவிகள் வாரியங்கள் மூலம் வழங்கப்படுகின்றன. ஆனால், உணவகம் தொழிலாளர்களுக்கென தனி வாரியம் ஏதும் இல்லாததால், பிற வாரியங்கள் மூலம் விண்ணப்பிப்பதால் எங்களின் கோரிக்கைக்கு உரிய பலன் கிடைப்பதில்லை.
பல வகையான தொழிலாளாளர்களுக்கும் சேர்த்து பொதுவான வாரியமாகச் செயல்படுவதால் உணவகம் தொழிலாளர்களின் பிரச்சினைகளையும், குறைகளையும் கருத்தில் கொள்வதில்லை. உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாததால், பலருக்கும் உடல் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
உணவுப்பொருள்களின் விலை அதிகரித்தாலும், அதற்கேற்ற ஊதிய உயர்வு இல்லை. மாவட்டக் கண்காணிப்புக் குழு கூட்டத்தில்கூட, உணவகம் தொழிலாளர்களின் பிரச்சினைக்குத் தீர்வு கிடைப்பதில்லை.
எனவே, உணவகம், தேநீர்க் கடைகள், உணவுத் தின்பண்ட விற்பனை நிலையங்கள், தங்கும் விடுதிகளில், விருந்து சமைப்பவர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களைக் கொண்ட தனி வாரியத்தை அமைக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எம்.எஸ். ரமேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் கோரிக்கை குறித்து, அரசு அலுவலர்கள் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.