மதுரை: தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு தொடர்பாக விரைவில் தீர்ப்பு வெளியாக வாய்ப்பிருப்பதாக மூத்த வழக்கறிஞர் சிகரம் செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.
உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் செய்தியாளர்களைச் சந்தித்த மூத்த வழக்கறிஞர் செந்தில்நாதன், “தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் தான் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் எனக் கூறிய மனுக்களின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்களும் தங்களது வாதங்களை முன்வைத்தனர்.
‘தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்தும்வரை ஓயமாட்டேன்’ - பெ. மணியரசன்
ஆகமம் எந்த இடத்திலும் மொழி குறித்தோ, சாதி குறித்தோ பேசவில்லை. ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயில் மராட்டியர் காலத்தில் வடமொழி ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. சமஸ்கிருதத்தின் ஆதிக்கம் என்பது வெறும் 400 ஆண்டுகளுக்கு முற்பட்டது.
சோழ மன்னன் ராஜராஜசோழன் காலத்தில் தமிழில் தான் வழிபாடும் குடமுழுக்கும் நடத்தப்பட்டன. இதற்கான ஆதாரங்கள் உள்ளன. தஞ்சை பெரிய கோயிலில் உள்ள கல்வெட்டுகள் அனைத்தும் தமிழில் தான் உள்ளன. சோழமன்னன் ராஜராஜன் திருமுறை கண்ட சோழன் என்ற பெயரால் இன்று அழைக்கப்படுவது, இதற்கெல்லாம் சான்றாக அமைந்துள்ளது. மேற்கண்ட அனைத்தையும் வழக்கறிஞர்கள் தங்களின் வாதமாக முன்வைத்தனர்.
கோயில் சிலை கடத்தல் வழக்கு: முன்னாள் காவல் ஆய்வாளர் ஆஜராக உத்தரவு
தமிழ்நாடு அரசின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தமிழிலும் வடமொழியிலும் குடமுழுக்கு நடத்துவதற்கு நாங்கள் உரிய ஏற்பாடுகளைச் செய்கிறோம் என்று வாதிட்டனர். இப்போது தமிழ்நாட்டிலுள்ள சிவன் கோயில்களில் தேவாரம் திருவாசகம் ஆகியவை தமிழில் அவர்களால் ஓதப்பட்டு வருகின்றன.
ஆனால் எங்களது கோரிக்கை எல்லாம் தமிழை வெறுமனே பயன்படுத்தக் கூடாது என்பதுதான். குடமுழுக்கிற்கான அனைத்து நிகழ்வுகளிலும் தமிழ் இடம்பெற வேண்டும் அதனை பெயருக்கு பயன்படுத்துவது கூடாது என்பதை நீதிமன்றத்தில் தெளிவாக எடுத்துரைத்தோம். இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு விரைவில் வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். குடமுழுக்கு பிப்ரவரி ஐந்தாம் தேதி நடைபெறவுள்ளதால் அதற்குள் இவ்வழக்கில் தீர்ப்பு வரும் என நம்புகிறோம்” என்றார்.