மதுரை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மதுரை மத்திய சிறையில் இருக்கும் ரவிச்சந்திரனுக்கு ஒரு மாத சிறை விடுப்பு வழங்க கோரி மனு தாக்கல், பரோல் வழங்குவது குறித்து அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
ரவிசந்திரனின் தாயார் ராஜேஸ்வரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில்,"முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் எனது மகன் ரவிச்சந்திரன் இருந்து வருகிறார்.தண்டனை பெற்றுவரும் ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதனடிப்படையில் 7 பேரையும் விடுதலை செய்யலாம் என தமிழ்நாடு அரசின் அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானம் ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருப்பில் உள்ளது.கொரோனா காலத்தில் எனது மகன் ரவிச்சந்திரனுக்கு மூன்று மாத கால விடுப்பு வழங்க கோரி மனு அனுப்பினேன். அதற்கு மத்திய அரசின் சட்டப்பிரிவின் கீழ் எனது மகன் தண்டனை பெற்று உள்ளதால் அவருக்கு சாதாரண விடுப்பு வழங்குவது குறித்து பரிசீலனை செய்ய இயலாது என தமிழக அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டு, அந்த மனுவும் நிராகரிக்கப்பட்டது. எனவே 27 ஆண்டுகளாக நன்னடத்தையுடன் சிறையில் இருந்துவரும் எனது மகன் ரவிச்சந்திரனுக்கு இரண்டு மாதகால சாதாரண விடுப்பு வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கல்யாணசுந்தரம், இளங்கோவன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பரோல் வழங்குவது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினார்.
மனுதாரர் தரப்பில், ஏற்கனவே தொடர்ந்து தமிழக அரசு கால அவகாசம் கோரி வருவதாகவும், தேர்தல் நெருங்குவதால் இதனை கருத்தில் கொண்டு சாதாரண விடுப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
இதனை தொடர்ந்து நீதிபதிகள் சாதாரண விடுப்பு வழங்குவது குறித்து அரசு தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 17ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு!