மதுரை பொன்மேனி பகுதியில் அம்மா மினி கிளினிக்கை தொடங்கிவைத்த பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், "கரோனா கால சூழலில் வேலை நிறுத்தம் என்பது வரவேற்கத்தக்கதல்ல. போக்குவரத்து பணிமனைகள் அனைத்தும் திமுக ஆட்சியில் கடலில்தான் இருந்தன. அதிமுக ஆட்சியில் மானியம் வழங்கி புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு அதனை சீர்படுத்தியவர் அன்றைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பது அதிமுக அரசு.
கல்வியாளர்களின் ஆலோசனைகள் பெற்ற பிறகு 9, 10, 11ஆம் வகுப்பிற்கான தேர்ச்சி அறிவிப்பை முதலமைச்சர் அறிவித்தார். எடுத்தேன், கவிழ்த்தேன் என எதையும் அவர் செய்யமாட்டார். கரோனா சூழலில் பிள்ளைகள் படிக்க காலம் போதவில்லை. தேர்வு என்பதும் எட்டாக்கனியாக இருந்தது. எனவே மாணவ, மாணவியரின் சஞ்சலத்தை போக்கும் வகையில் ஆல் பாஸ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள், பெற்றோர், கல்வியாளர்கள் இந்த அறிவிப்பை வரவேற்கின்றனர். பள்ளிக்கு செல்லாமல் எப்படி தேர்வு எழுதமுடியும் எது செய்தாலும் அதில் தவறு சொல்லக்கூடியவர்கள் எதிர்க்கட்சியினர்.
இங்கிலாந்து - இந்தியா கிரிக்கெட் எப்படியோ அதுபோல தற்போது தமிழ்நாடு அரசியல் உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு எப்படி பால் போடுவது என்றே தெரியவில்லை. முதலமைச்சரின் அறிவிப்புகளால் ஸ்டாலின் கிளீன் போல்ட் ஆகிவிடுகிறார். வரும் தேர்தலில் அடுத்த முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுக்க மக்கள் தயாராகி விட்டனர்” என்றார்.
தினகரன் முதலமைச்சர் வேட்பாளர் என்ற அமமுக தீர்மானம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு கருத்து தெரிவிக்க அமைச்சர் செல்லூர் ராஜூ மறுத்து விட்டார்.
இதையும் படிங்க: நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி: முதலமைச்சர் அறிவிப்பு