NEET postgraduate medical exam: மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இன்று (ஜன.24) வெளியிட்டுள்ள அறிக்கையில், "2021 நீட் முதுகலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வு முடிவதற்கு முன்பே 2022 நீட் முதுகலை மருத்துவப் படிப்பிற்கான தேர்வை அறிவித்துள்ளது.
நீட் என்றாலே குழப்பம், பாதிப்பு என்றுதான் பொருள் போல. 2021 நீட் முதுகலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வு மிக மிகத் தாமதமாக நடந்தேறி வருகிறது. இதில் அகில இந்திய இடங்கள்/ மத்திய மற்றும் நிகர் நிலைப் பல்கலைக் கழகங்கள்/முதுகலை தேசிய ஆணைய பட்டயப் படிப்பு ஆகியவற்றில் நிரம்பாத உதிரி காலியிடங்களுக்கான கலந்தாய்வு மார்ச் 11இல் இருந்து மார்ச் 16, 2022 வரை நடைபெறவிருக்கிறது.
இது முடிவதற்கு முன்பாகவே மார்ச் 12 அன்று 2022 நீட் முதுகலை மருத்துவப் படிப்பிற்கான தேர்வு என அறிவிக்கப்பட்டு இருப்பதுதான் அதிர்ச்சியை தந்துள்ளது. இந்தத் தேர்வுக்கு பின்னால் கலந்தாய்வை முடிக்கிற மாணவர்கள் தங்களின் நிலை என்ன என்று தெரியாத நிலையிலும், கலந்தாய்வு தேர்வு இரண்டையும் எதிர்கொள்ள இயலாத மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.
ஓராண்டு வீணாகி விடுமோ என்ற கவலை எழுந்துள்ளது. இவ்வளவு தாமதமாக 2021 கலந்தாய்வை நடத்தும் போது 2022 தேர்வை ஒரு மாதம் தள்ளி நடத்தக் கூடாதா என்ற நியாயமான கோரிக்கையை எழுப்புகின்றனர். இது அநீதி.
மாணவர்களின் சிரமங்களை கிஞ்சித்தும் கணக்கிற் கொள்ளாமல் எடுக்கப்பட்டுள்ள முடிவு. எனவே உடனடியாக தலையிட்டு ஒரு மாத காலமாவது 2022 நீட் முதுகலை மருத்துவப் படிப்பிற்கான தேர்வை தள்ளி வைக்க வேண்டுமென ஒன்றிய சுகாதார அமைச்சர் மரு. மன்சுக் மாண்டவியா அவர்களுக்கு இன்று கடிதம் எழுதியுள்ளேன்” என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நாடாளுமன்றத்தில் 875 பேருக்கு கரோனா- பட்ஜெட் கூட்டத் தொடர் நடக்குமா?