மதுரை : தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த முத்தாலங்குறிச்சி காமராஜ் என்பவர்,
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "தாமிரபரணி ஆற்று முடிவில் அமைந்துள்ள மருதூர் அணை, 1500 ஆண்டுகள் பழமையானது. இந்த அணை கட்டப்படுவதற்கு முன்பு இப்பகுதியில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான கோயில் ஒன்று இருந்ததற்கான அடையாளம் தென்படுகிறது. சோழர் காலத்தில் இந்த கோயில் அழிக்கப்பட்டு அணை கட்டப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஆதிச்சநல்லூர் பகுதிகளில் ஏற்கனவே அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்று பல்வேறு பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. அதே போல், அதன் அருகே உள்ள இந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்து கிடைக்கும் பொருள்களை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என தொல்லியல் துறை அலுவலர்களுக்கு மின்னஞ்சல் மூலம் செய்தி அனுப்பி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே, நீதிமன்றம் தலையிட்டு மருதூர் அணைப் பகுதியில் அகழ்வாராய்ச்சி நடத்த உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன் புகழேந்தி ஆகியோர் முன்பு இன்று(நவ.24) விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், "தமிழ்நாட்டில் அதிக அளவு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால், பழமையான இடங்கள், அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடங்கள் பற்றி பொதுமக்கள், சுற்றுலா பயணிகளுக்கு தெரியப்படுத்தப்படுவது இல்லை. இது போன்ற பழமையான இடங்கள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிப்பதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் எதிர்புறம் உள்ள யானைமலையில் 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜெயின் படுக்கைகள், தமிழ் பிராமி எழுத்துக்கள் இருக்கின்றன. இது இங்கு எத்தனை வழக்கறிஞர்களுக்கு தெரியும்? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
பழமையான இடங்கள் குறித்து, அறிவிப்பு பலகைகள் வைப்பதன் மூலம், அப்பகுதியில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும், பழமை அழியாமல் காப்பாற்றவும் முடியும். இது சுற்றுலாவிற்காக தமிழ்நாடு வரும் பயணிகளை அதிக அளவில் ஈர்க்கக் கூடியதாக இருக்கும்" என நீதிபதி கருத்து கூறினார்.
மக்களுக்கு அதிகம் தெரிந்த மகாபலிபுரம் போன்ற இடங்களுக்கு வார இறுதியில், லட்சக்கணக்கில் மக்கள் வந்து செல்கின்றனர். எனவே பழமையான இடங்கள் மற்றும் தொல்லியல் ஆய்வு நடக்கும் இடங்கள் குறித்து பொது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்" என நீதிபதி கருத்து கூறினார்.
தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் உள்ள பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், நீதிமன்றங்கள் மற்றும் மக்கள் அதிக அளவு கூடும் இடங்களில் பழமை வாய்ந்த இடங்கள், தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளும் இடங்கள் குறித்து பலகைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும்" என கூறி வழக்கு விசாரணையை டிசம்பர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: "மணல் மாஃபியாக்களுக்குதான் தூத்துக்குடி போலிஸ் பாதுகாப்பு வழங்குவார்களா..." - உயர் நீதிமன்றம் வேதனை!