மத்திய பாஜக அரசைக் கண்டித்து SRES-NFIR தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை ரயில் நிலையம் மேற்கு நுழைவு வாயில் அருகே நடைபெற்றது. இது குறித்து, மதுரை கோட்ட செயலாளர் கஜூனா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, ‘தொடர் வண்டிகளைத் தனியாருக்கு இயக்க குத்தகைக்கு விடுவது, தொடர்வண்டி கட்டணங்களை உயர்த்துவது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில், மூத்த குடிமக்கள், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு வழங்கப்பட்டு வரும், பல சலுகைகளை ரத்து செய்வதை நிறுத்த வேண்டும்.
ரயில்வே துறையானது, லாபத்திற்காக மட்டும் இயங்குவது கிடையாது. இது ஒரு சேவை மனப்பாங்கு ஆனது. லாபத்திற்கு இயங்கிவரும் ICF, பொன்மலை போன்ற ஏழு பணிமனைகளை, பெருநிறுவனமாக மாற்றுவது உள்ளிட்ட மத்திய அரசின் 100 நாள் திட்டத்தையும் கைவிட வேண்டும். 55 வயதான ரயில்வே ஊழியர்கள், கட்டாய ஓய்வில் அனுப்பும் திட்டத்தைக் கைவிட வேண்டும்.
தொடர்ந்து தனியார் மயமாக்குதல் திட்டங்களை மத்திய அரசு, கைவிடாவிட்டால் அனைத்துச் சங்க அமைப்பினரும், ஒன்றுகூடிக் கடந்த 2011 ஜூலை 11 அன்று நடந்திருந்த நாடு தழுவிய தொடர் வேலை நிறுத்தத்தைப் போன்று, பெரியளவில் போராட்டங்களை முன்னெடுக்க நேரும் என வலியுறுத்திக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்’ என்று கூறினார்.