சென்னை: தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்குவது போல் பணியிலுள்ள ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் என இளையான்குடியைச் சேர்ந்த குறளரசன் உள்பட பலரும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி, பணியிலுள்ள முப்படை வீரர்களின் வாரிசுகளுக்கு மருத்துவப் படிப்பில் தனி ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டார். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு அரசு, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.
சுயநலமற்றவர்கள்
இந்த மனுவை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து தீர்ப்பளித்திருந்த நிலையில், உத்தரவின் நகல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், "படை வீரர்கள் மாதக்கணக்கில், ஆண்டுக்கணக்கில் என குடும்பங்களை விட்டுப் பிரிந்து நாட்டின் நலனுக்காக பணிபுரிகின்றனர்.
சில நேரங்களில் எதிரிகளால், பயங்கரவாதிகளால் கொல்லப்படுகின்றனர். படை வீரர்கள் சுயநலமற்ற தியாகம் புரிந்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் பணியிலுள்ள ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு தனி ஒதுக்கீடு வழங்கப்படாதது அதிர்ச்சியளிக்கிறது.
1% இடமாவது வேண்டும்
தமிழ்நாட்டில் ஓய்வு பெற்ற படை வீரர்களின் வாரிசுகளுக்கு 11 இடங்கள் ஒதுக்கப்படுகிறது. இது போதுமானதாக இல்லை. ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பணியிலுள்ள ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கும் எம்பிபிஎஸ் சீட்டுகள் ஒதுக்கப்படுகின்றன.
தமிழ்நாட்டில் நாட்டின் நலனுக்காக பணிபுரிந்து வரும் ராணுவ வீரர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில், பணியிலுள்ள ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு அடுத்தக் கல்வியாண்டிலிருந்து மருத்துவ மாணவர் சேர்க்கையில் குறைந்தது ஒரு விழுக்காடு இடம் ஒதுக்கப்படும் என நீதிமன்றம் எதிர்பார்க்கிறது.
எனவே, மருத்துவ மாணவர் சேர்க்கையில் முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெறும் மொத்த இடங்களை அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்கும் வகையில், 12 வாரங்களில் ஒன்றிய அரசு மாற்றியமைக்க வேண்டும்" என உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: நீட் தேர்வு - மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டி விதிமுறைகள்!