மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே, டாஃபே நிறுவனம் விவசாயத்திற்கு பயன்படும் டிராக்டர்களைத் தயாரித்து வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் டிராக்டர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சாலை வழியாகவும், ரயில் மூலமாகவும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
கடந்த 2019ஆம் ஆண்டு வாடிப்பட்டியிலிருந்து, 12 சரக்கு ரயில்களில் டிராக்டர்கள் அனுப்பப்பட்டு, 2 கோடியே 33 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டது. அதேபோல் 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை 61 சரக்கு ரயில்களில் டிராக்டர்கள் அனுப்பப்பட்டு 11 கோடியே 78 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டது. இது 2019ஆம் ஆண்டைக் காட்டிலும் 80 விழுக்காடு அதிக வருமானமாகும்.
இந்த சாதனைகளில் முத்தாய்ப்பாக இன்று (ஜன.1), முதல் முறையாக அண்டை நாடான, வங்கதேசத்திற்கு, 25 சரக்கு பெட்டிகளில் 170க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் அனுப்பப்பட்டுள்ளன. வாடிப்பட்டியிலிருந்து செல்லும் இந்த டிராக்டர்கள் வங்கதேசத்தின் பேனாபோல் என்ற ரயில் நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது.
மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் வி.ஆர்.லெனின் உத்தரவின் பேரில், கோட்ட வர்த்தக மேலாளர் டி.எல். கணேஷ், முதல்முறையாக வெளிநாட்டுக்கு அனுப்பப்படும் டிராக்டர்கள் ஏற்றும் பணிகளைத் துவக்கி வைத்தார்.
தென்னக ரயில்வேயில், முதல்முறையாக இந்தியாவிலிருந்து வெளிநாட்டிலுள்ள ரயில் நிலையத்திற்கு, தமிழ்நாட்டின் மதுரையில் தயாரிக்கப்பட்ட டிராக்டர்கள் ரயில் மூலமாக அனுப்பப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தெற்கு ரயில்வேயின் இந்த சாதனை குறித்து, மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அதில், தமிழ்நாட்டின் வாடிபட்டியில் தயாரிக்கப்பட்ட டிராக்டர்கள் வங்கதேசத்தின் பேனாபோல் ரயில் நிலையத்திற்கு அனுப்பட்டுள்ளன. இதன்மூலம், இந்தியா தனது, முன்னோடியான விவசாய தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்கள் மூலமாக, உலகின் முக்கியமான விவசாய பொருள்கள் வழங்குபவர்களாக வளர்ந்து வருவது உறுதியாகியுள்ளது என பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மக்கள் பலத்தையே நம்பியுள்ளோம்! - கமல் ஹாசன்