கரோனா வைரஸ் பரவாமல் இருக்க சமூக இடைவெளி மிக மிக அவசியம் என்று மத்திய, மாநில அரசுகள் ஓயாமல் பரப்புரை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் மதுரையில் நடைபெறும் அமைச்சர்கள் பங்கேற்கும் அரசு சார்ந்த விழாக்களில், மருந்துக்குகூட அதனைக் கடைப்பிடிப்பதில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது.
மதுரை மாநகர், மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, வருவாய்த்துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார் ஆகியோர் போட்டி போட்டுக்கொண்டு பல்வேறு அரசு சார்ந்த விழாக்களை நடத்திவருகின்றனர். இவை அனைத்திலும் சமூக இடைவெளி கொஞ்சமும் கடைபிடிக்கப்படுவதில்லை. பாதுகாப்புக்கு வருகை தரும் காவல்துறையினரும் கண்டும் காணாமல் இருந்துவருகின்றனர். அமைச்சர்களுக்கு பயந்துகொண்டு அலுவலர்களும் இதில் அக்கறை செலுத்துவதில்லை.
இன்று மதுரை பொன்மேனி அருகேயுள்ள நியாயவிலைக் கடையில் மாநில அரசின் மளிகை பொருள்கள் தொகுப்பு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்த அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்ட நிகழ்ச்சியில், பெருமளவில் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஆனால் அந்நிகழ்ச்சி எந்த ஒரு ஒழுங்கும் இல்லாமல் கரோனாவுக்கு பச்சைக் கம்பளம் விரிப்பதைப் போன்று நடைபெற்றது.
அதேபோன்று முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கி மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் உத்தரவு பிறப்பித்திருந்தும்கூட, எந்தக் நிகழ்ச்சியிலும் அமைச்சர்கள் அதனை வலியுறுத்துவது இல்லை. மாநில அரசு பிறப்பிக்கும் உத்தரவை தாங்கள் சார்ந்த விழாக்களில் அனைவரும் கடைப்பிடிக்க அமைச்சர்கள் செல்லூர் ராஜூவும், உதயகுமாரும் இனியாவது வலியுறுத்துவார்களா என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதையும் படிங்க... சித்திரை திருவிழாவை 'மிஸ் செய்யும்' அனைவருக்கும் இது சமர்ப்பணம்