மதுரை: பாளையங்கோட்டையைச் சேர்ந்த முத்துமாலை, உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “சீவலப்பேரியில் தனியார் நிலத்தில் 20.3.2018 முதல் 19.3.2021 வரை 3 ஆண்டுகளுக்கு மண் கல் குவாரி நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி பெறுவதற்கு முன்பாக திட்டம் தயாரித்து ஒப்புதல் பெற்றிருக்கவேண்டும். இதற்காக போலியாக தயாரிக்கப்பட்ட பல ஆவணங்களை கொடுத்துள்ளனர்.
இந்த ஆவணங்களை முறையாக பரிசீலிக்காமல் அனுமதி கொடுத்துள்ளனர். இதுகுறித்து கனிமளவத்துறை இயக்குநர், மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தேன். கனிமவளத்துறை மண்டல இணை இயக்குநர் விசாரிக்க வலியுறுத்தினர். இதன்பேரில் விசாரணை நடந்தது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆனால், தற்போது வரை குவாரி நடந்து வருகிறது. இதனால், அரசுக்கு அதிகளவு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, குவாரி செயல்படத் தடை விதிக்க வேண்டும். புகார் குறித்து முழுமையாக விசாரித்து குவாரிக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி, “இந்த விவகாரத்தில் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் தரப்பில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.