மதுரையில் தனியார் மருத்துவமனை சார்பில் மருத்துவம் சார்ந்த துறைகளில் சாதனை புரிந்தோர்களுக்கு, தொடர்ந்து 2 ஆண்டுகளாக விருது தரப்பட்டு வருகிறது. 2019ஆம் ஆண்டுக்கான போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து பலப் போட்டியாளர்கள் பங்கேற்று, மூன்று பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்று, ஒவ்வொரு பிரிவிலும் ஒரு வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்களுக்கு தமிழ்நாட்டின் தலை சிறந்த முதலமைச்சர்களாகக் கருதப்படும் காமராஜர், ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார், P.S. குமாரசாமி ராஜா ஆகியோர் பெயரில் விருதுகளுடன் தலா இரண்டு லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. இவ்விழாவை தலைமையேற்று நடத்திய தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வெற்றியாளர்களுக்கு விருதுகள் வழங்கிப் பேசினார்.
விழாவில் பேசிய தமிழிசை, 'மருத்துவ கண்டுபிடிப்புகளுக்கான பரிசு பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள். கனவுகள் தூங்கும் பொழுது வருவது, லட்சியம் தூங்கவிடாமல் வருவது என விவேகானந்தர் கூறியுள்ளார். அரசியல்வாதி மகள் என்பதால், நான் எளிதாக மருத்துவம் படித்து முடித்தேன் என நினைக்க வேண்டாம். கடுமையான உழைப்பால் தான் மருத்துவராக இருக்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், 'வாழ்க்கை என்பது சாதாரணம் விஷயம் கிடையாது. அரசியல் என்பது பொதுவாக ஆண்களின் உலகம். அதில் பெண்ணாக வளர்வது என்பது சாத்தியமற்றது. கடுமையானச் சவால்களை சந்தித்துதான் நாங்கள் இந்த நிலையை அடைந்திருக்கிறோம்' என்றார்.
மேலும், 'படிக்கும் போது மாணவ மாணவிகள் பல பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அந்தப் பிரச்னைகளை எதிர்கொள்வது தான் வாழ்க்கை நமது அம்மாவும் அப்பாவும் பல்வேறு கஷ்டங்களை எதிர்கொண்டுதான் நம்மை படிக்க அனுப்பி இருக்கிறார்கள். அவர்கள் நினைத்ததை சாதிப்பதைத்தான் குறிக்கோளாக கொள்ள வேண்டுமே தவிர, இடையில் வரும் சவால்களை எதிர் கொள்ள முடியாமல் தற்கொலை செய்யக் கூடாது' எனக் கேட்டுக்கொண்டார்.
ஐ.ஐ.டி.பாத்திமா லத்தீஃப் தற்கொலை சம்பவம் குறித்து இவ்வாறு மறைமுகக் கருத்து தெரிவித்துள்ள தமிழிசை, ' எவ்வளவு பெரும் சவாலான சூழ்நிலைகள் இருந்தாலும் அதனைச் சமாளிக்க கூடிய மனப்பக்குவம் மாணவர்களுக்கு இருக்க வேண்டும். இனி தமிழ்நாட்டில் எந்த தற்கொலையும் நடைபெறக் கூடாது' எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: திமுகவை யாராலும் அழிக்க முடியாது - திமுக பொருளாளர் துரைமுருகன்