சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கை சிபிஐ விசாரணை செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை சிபிஐ 105 நபர்களிடம் விசாரணை செய்யப்பட்டு உள்ள நிலையில், சாத்தான்குளம் காவல் துறையினரால் தாக்கப்பட்ட மற்ற மூவரின் வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதில், சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ராஜாசிங், தாக்குதலுக்கு உள்ளாகி இறந்து போன மகேந்திரன், அதேபோல் தட்டார் மடம் காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த செல்வன் ஆகிய மூவரின் வழக்குகளை சிபிசிஐடி காவலர்கள் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கையும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கண்காணித்து வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கில் இடைக்கால அறிக்கையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சீலிடப்பட்ட கவரில் நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் சிபிசிஐடி தாக்கல் செய்தது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதேபோல் சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கும் நவம்பர் 11ஆம் தேதி குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதாக, நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை இரண்டு வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.
முன்னதாக, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவலர்களால் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட ராஜாசிங், மகேந்திரன் ஆகியோரும் தட்டார்மடம் காவலர்களால் தாக்குதலுக்கு ஆளாகி செல்வன் என்பவரும் உயிரிழந்தனர்.