திருப்பரங்குன்றம் அருகே நடைபெற்ற அமமுக அமைப்புச் செயலாளர் மகேந்திரன் இல்லத் திருமண விழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பங்கேற்று, மணமக்களுக்கு மங்கல நாண் எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். விழாவில் பேசிய அவர், “வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி சசிகலா தமிழகம் வருகிறார். அவருக்கு தமிழக எல்லையிலிருந்து நாம் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறின்றி தொண்டர்கள் வரவேற்பு பணியில் ஈடுபட வேண்டும்.
அதிமுகவில் இணைய வேண்டுமெனில் நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார்கள். யார் மன்னிப்பு கேட்க வேண்டும், அவர்களை யார் மன்னிக்க வேண்டும் என காலம் பதில் சொல்லும். அதிமுக பொதுச்செயலாளராக இருந்து சசிகலா நம்மை வழிநடத்துவார். அதற்கான சட்டப் போராட்டங்களை அவர் தொடங்க உள்ளார். நீதிமன்றம் முடிவு செய்யும் வரை பொறுத்திருப்போம். அமமுக ஆரம்பிக்கப்பட்டதே தீய சக்திகளிடமிருந்து அதிமுகவை மீட்டு எடுக்கத்தான்” என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த தினகரன், “சசிகலாவின் வருகை தமிழகத்தில் சிலருக்கு கெமிக்கல் ரியாக்ஷனை உருவாக்கி உள்ளது. திமுகவை ஆட்சிக்கு வரக்கூடாது என்கிற பரந்த மனப்பான்மை எங்களுக்கு உள்ளது. தேர்தலுக்கு அமமுக தயராகியுள்ளது. சென்னைக்கு வந்தபின் எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களுக்கு போக சசிகலா நினைத்தார். அதற்காகவே அங்கு செல்ல அரசு திடீர் தடை போட்டுள்ளது. இதையெல்லாம் மக்கள் கவனித்து கொண்டுதான் இருக்கின்றனர்.
ஸ்லீப்பர் செல்கள் அவர்களது பணியை சரியாக செய்வார்கள். போஸ்டர் அடித்தவர்களை கட்சியிலிருந்து நீக்குவதையும், சசிகலாவுக்கு ஓபிஎஸ் மகன் வாழ்த்து தெரிவித்ததையெல்லாம் பார்த்து சிரித்துக்கொண்டுள்ளேன். தமிழகத்தில் சசிகலாவின் பங்கோடு ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை கட்டாயம் அமைப்போம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வெளியானது திமுக பரப்புரை பாடலின் முன்னோட்ட காட்சி