மதுரையில் நடைபெற்றுவரும் 14ஆவது புத்தகத் திருவிழாவில், கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி. மகேந்திரன் எழுதிய 'அறிவு பற்றிய தமிழரின் அறிவு' என்னும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
அந்நூலை வெளியிட்டுப் பேசிய தமிழர் தேசிய தலைவர் பழ. நெடுமாறன், "சங்க இலக்கியங்கள், சங்கம் மருவிய கால இலக்கியங்கள், பக்தி இயக்க கால இலக்கியங்கள் பின்னர் உருவான சிற்றிலக்கியங்கள் அனைத்திலும் தமிழர் தம் அறிவு மரபு புதையுண்டு கிடக்கின்றன. அதனை வெளிக்கொண்டுவர வேண்டும் என்பதற்கான முதல் அடியே மகேந்திரனின் இந்த நூல்.
சமஸ்கிருதம் தான் இந்தியாவிலுள்ள அனைத்து மொழிகளுக்கும் தாய் என்ற கற்பிதம் உருவாக்கப்பட்டு ஆங்கிலேயர்களால் அந்த பொய் பரப்பப்பட்டது. இதற்கு மேக்ஸ்முல்லர் போன்ற அறிஞர்கள் பலிகடாவாக்கப்பட்டார்கள். கால்டுவெல் போன்ற அறிஞர்களால்தான் தமிழின் தனித்தன்மை குறித்த உண்மை வெளிக்கொண்டு வரப்பட்டது.
ஒரு மொழியின் அடிப்படையில்தான் ஒரு தேசிய இனம் உருவாகிறது அதன் பண்பாடு கட்டமைக்கப்படுகிறது என்பது உண்மை. இந்த உண்மையை உலகம் உணர்ந்திருக்கிறது. ஆனால் இவற்றையெல்லாம் அழித்து ஒழித்துவிட்டு ஒற்றைத் தன்மையை உருவாக்கும் பேரபாயம் தமிழர்களுக்கு மட்டுமல்ல. இந்தியா முழுவதையும் சூழ்ந்திருக்கிறது" என்றார்.
சி. மகேந்திரன் பேசுகையில், "சமஸ்கிருதத்தால்தான் இந்திய அறிவு மரபு உருவானது என்ற பொய்ப்பரப்புரை எத்தனை மிகத் தவறானது. வீரமும், காதலும் என்பதைத் தாண்டி அறிவுத் தோற்றவியலில் தமிழர்களின் தொன்மை தொல்காப்பியத்திலிருந்து தற்போதுவரை நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற முழக்கத்தின் நீட்சிதான் 'உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்' என்பதும்.
பொதுவுடமைக் கருத்தியல் பிதாமகன் காரல்மார்க்ஸ், தன்னுடைய பல்வேறு கூற்றுகளில் மேலை நாட்டு இலக்கியங்களையே மேற்கோளாக்குகிறார். ஆனால், ஒருவேளை அவருக்கு தமிழர்களின் சங்க இலக்கியங்கள் குறித்து அறியத் தரப்பட்டிருந்தால், அவரது கூற்றில் 90 விழுக்காடு தமிழர்களின் அறிவு மரபே மேலோங்கியிருந்திருக்கும் என உறுதியாக நம்புகிறேன்" என்றார்.
விழாவில் பட்டிமன்றப் பேச்சாளர் சாலமன் பாப்பையா, டிஸ்கவரி பேலஸ் பதிப்பகத்தின் வெளியீட்டாளர் வேதியப்பன், நூலகவியல் அறிஞர் பாண்டுரங்கன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.