மதுரை: அனைத்து சமூகத்துக்கும் இட ஒதுக்கீடு கண்டிப்பாக வேண்டும். அதை சாதியை அடிப்படையாக வைத்து இல்லாமல், பொருளாதார அடிப்படையில் வழங்க வேண்டும் என்று மனித உரிமைக் கட்சி தலைவர் நடிகர் கார்த்திக் கூறியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து நடிகர் கார்த்திக் பேசியதாவது:-
நடிகர்கள் சாதி, மதம், இனம் என பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் பொதுவானவர்கள். அரசியலுக்கு வருவதற்கு முன் நானும் அப்படிதான் இருந்தேன். ஆனால் நான் சார்ந்த இந்தக் கட்சி முக்குலத்தோர் உள்ள கட்சி. ஆனாலும் நாங்கள் அனைத்து சமுதாய மக்களுக்காகவும் குரல் கொடுத்து வருகிறோம்.
பொதுவாக இட ஒதுக்கீட்டில் டிஎன்டி மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று முதலமைச்சரிடம் கூறினேன். இட ஒதுக்கீடு சாதி ரீதியாக இல்லாமல் அனைத்து சமூகத்திலும், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு வாய்ப்பு வழங்கினால் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
நான் வசதியாக உள்ளேன் எனக்கு எதுவும் தேவை இல்லை. ஆனால், நலிவடைந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு கிடைத்தால் மிகவும் நன்றாக இருக்கும். சமூக நீதி காக்கப்பட வேண்டும். அதுவே மனித உரிமைக் கட்சியின் அர்த்தம்.
இதுகுறித்து முதலமைச்சரை சந்தித்தபோது எனது சமூக மக்களுக்கு ஏதாவது செய்யுங்கள் என்று கூறியுள்ளேன். அவர் தேர்தலில் போட்டியிட எனக்கு சீட் தருகிறேன் என்று கூறினார். ஆனால் நான் பரப்புரைக்கும் மட்டும் வருகிறேன் என்று கூறிவிட்டேன்.
தற்போது பரப்புரைக்காக வந்துள்ளேன். கோவில்பட்டியில் பரப்புரை செய்ய உள்ளேன். என்னுடன் இருந்த ஏராளமான பேர் மாற்றுக் கட்சிக்கு சென்று விட்டனர். ஆனால் இன்று வரை என்னுடன் கூட இருக்கும் உண்மையை தொண்டர்கள் என்னுடன்தான் இருக்கிறார்கள்.
பரப்புரைக்கு செல்வதற்கு முன் என்னை மிரட்ட பார்க்கிறார்கள். நான் எனது கட்சிக்காரர்களிடம். கம்பு கொண்டு வாருங்கள் ரொம்ப நாளாயிற்று சுற்றிப் பார்க்க (சிலம்பம்) வேண்டும் என்று கூறியுள்ளேன்.
இவ்வாறு நடிகர் கார்த்திக் கூறினார்.
அமமுக கட்சி டிடிவி தினகரன் தரப்பிலிருந்து யாரும் மிரட்டினார்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, நான் இதுவரை அவரை பார்த்ததே இல்லை. அவர் மரியாதைக்குரிய நபர்” என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டை கட்டமைக்க தேவையான அஸ்திவாரம் நேர்மை - கமல்ஹாசன்