மதுரை: தட்டெழுத்து மற்றும் வணிகவியல் பள்ளிகள் நலச்சங்கம் சார்பில் அதன் 53 ஆவது பொதுக் கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன் பிறகு ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் பேசிய அச்சங்கத்தின் தலைவர் மனோகரன், "தட்டச்சு தேர்வுகளில் தமிழ்நாடு அரசு மாற்றம் கொண்டு வர வேண்டும். குறிப்பாக பழைய முறையிலேயே வேகத் தேர்வு முதலாவதாகவும் 2 ஆவது தாள் இரண்டாவதாகவும் நடைபெற்றால் தான் மாணவர்கள் அச்சமின்றி தேர்வினை எதிர்கொள்ள முடியும்.
அதேபோன்று முதுநிலை மாணவர்களுக்கு நான்கு அணியாக மட்டுமே நடைபெறுகின்ற தேர்வை மாற்றி மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள காரணத்தால் ஐந்தாவது அணிக்கு அனுமதி அளிக்க வேண்டும். சுருக்கெழுத்து தேர்வுக்கான டிஜிட்டல் முறை தெளிவாக ஒளிபரப்பு செய்ய வேண்டும். இதனால் தேர்ச்சி விகிதம் குறைகிறது.
அந்த ஒளிபரப்பில் தெளிவின்மை காரணமாக மாணவர்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகிறார்கள். மிகத் தெளிவாக மாணவர்களுக்கு புரியும்படியாக டிஜிட்டல் முறை ஒளிபரப்பு செய்வது அவசியம். மேற்கண்ட மூன்று வேண்டுகோளும் தீர்மானமாக இயற்றப்பட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல முயற்சி மேற்கொள்வோம்" என்றார்.
இந்தப் பேட்டியின் போது மதுரை மாவட்ட தட்டெழுத்து மற்றும் வணிகவியல் பள்ளிகள் நலச்சங்க செயலாளர் கருணாகரன் மற்றும் இணை செயலாளர் நாகராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: 'மகளிருக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மட்டுமே சமுதாயம் வளரும்' - பழனிவேல் தியாகராஜன்