மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள அனைக்கரைப்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்னும் கல்லூரி மாணவர் செப்.16ஆம் தேதி அண்ணன் காதல் திருமணம் செய்தது தொடர்பான வழக்கில் சாப்டூர் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அடுத்த நாள்(செப்.17) அவரின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டது.
இந்த உயிரிழப்பில் போலீசார் மீது சந்தேகம் இருப்பதாக மாணவரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
அன்று மாலை உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் மாணவரின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டு அனைக்கரைப்பட்டி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதுதொடர்பாக சாப்டூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் ஜெயக்கண்ணன், பரமசிவம் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதற்கிடையில் மாணவரின் சகோதரர் சந்தோஷ் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நேற்று முன்தினம்(அக்.8) நீதிபதி சாமிநாதன் அமர்வுக்கு வந்தது. அதில் அவர், "உயிரிழப்பில் மர்மம் இருக்கும் வேளையில் அவசர அவசரமாக உடற்கூறாய்வு மேற்கொண்டதற்கு காரணம் என்ன? என கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர், உடற்கூறாய்வின் போது எடுக்கப்பட்ட காணொலிப் பதிவும் முறையாக சமர்பிக்கப்படவில்லை எனவும் அதனால் மறு உடற்கூறாய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
அதனடிப்படையில் அனைக்கரைப்பட்டி மையானத்தில் 21 நாள்களுக்கு முன் அடக்கம் செய்யப்பட்ட மாணவரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
அதையடுத்து மறு உடற்கூறாய்வு திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி பேராசிரியர் செல்வமுருகன், பிரசன்னா மற்றும் தடயவியல் துறை மூத்த மருத்துவர் மதிகரன் உள்ளடக்கிய மருத்துவக்குழுவினர் முன்னிலையில் நடைபெற்றது.
அப்போது மதுரை குற்றப்பிரிவு டி.ஜி.பி. நாகராஜன், பேரையூர் டிஎஸ்பி மதியழகன் உடனிருந்தனர். மேலும் இந்த மறு உடற்கூறாய்வு முடிவுகள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: குடும்பப் பிரச்னையால் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை