மதுரை மாவட்டத்தை கூடல் நகர், கோயில் நகரம், திருவிழா தலைநகரம், தூங்கா நகரம், மல்லிகை மாநகர், நான்மாடக்கூடல், திரு ஆலவாய், கடம்பவனம், தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என்றெல்லாம் அழைக்கப்பார்கள். இந்த பழமையான நகரை அறியாவதவர்கள் யாரும் இருக்கமுடியாது.
இங்குள்ள உலகப் புகழ் வாய்ந்த மீனாட்சியம்மன் கோயில் கட்டட அமைப்புகள் இன்றளவும் பொறியியல் வல்லுநர்களையும், மக்களையும் பெரும் வியப்பில் ஆழ்த்துகிறது. இந்த பாண்டியர்களின் கட்டடக் கலை சர்வதேச அளவில் ஆராய்ச்சியாளர்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. அப்படிப்பட்ட பாண்டியர்களைத் தொடர்ந்து மதுரையில் ஆட்சியமைத்த விஜயநகரப் பேரரசைச் சார்ந்த நாயக்கர்கள் காலத்தில் கட்டப்பட்டதுதான் புதுமண்டபம்.
புதுமண்டபம் வரலாறு
கோடைக்காலத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் வசந்த விழாவைக் கொண்டாடுவதற்காக, திருமலை நாயக்க மன்னர் 1635ஆம் ஆண்டு, இந்த மண்டபத்தைக் கட்டியதாகக் கூறப்படுகிறது. இந்த மண்டபம் முற்றிலும் கருங்கற்களாலானது. 333 அடி நீளம், 105 அடி அகலம், 25 அடி உயரம் கொண்டது. புது மண்டபத்தில் நான்கு வரிசைகளில் 125 தூண்கள் அமைந்து உள்ளன. இங்கு தலைசிறந்த கலைஞர்கள் மூலம் சிற்பங்கள் நேர்த்தியாகவும், அழகாகவும் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
சொல்லப்போனால் தமிழ்நாட்டின் சிறந்த சிற்ப, கட்டடக் கலைத்திறனுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. வெளிநாட்டிலிருந்து வருபவர்கள்கூட இந்தத் தூண்களின் அழகை ரசித்துவிட்டுச் செல்கின்றனர். சுமார் 500 ஆண்டுக்காலம் பழமை வாய்ந்த புதுமண்டபத்தில் பல்வேறு பகுதிகள் சற்றே சிதிலமடைந்து காணப்படுகின்றன. சிறு-குறு கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.
புதுப்பொலிவுடன் புதுமண்டபம்
இந்த நிலையில் தமிழ்நாடு அறநிலையத் துறையானது, புதுமண்டபத்தைப் புனரமைக்கவேண்டும் என்று முடிவு செய்தது. எனவே, அங்கு செயல்பட்டு வந்த கடைகள் அனைத்தையும் குன்னத்தூர் சத்திரத்துக்கு மாற்ற முடிவு செய்தது. அந்த வகையில் 95 விழுக்காடு கடைகள் கடைகள் மாற்றப்பட்டுவிட்டன. தற்போது 30 கடைகள் மட்டுமே அங்கு இயங்கி வருகின்றன. அதனையும் இடமாற்றம் செய்த பின்னர், புது மண்டபத்தை புனரமைக்கும் பணி தொடங்கப்படும். இங்குள்ள சிற்பங்கள் அனைத்தும் புத்தம் புது பொலிவுடன் மெருகூட்டப்படும்.
தொடர்ந்து மதுரை புதுமண்டபத்தில் முப்பரிமாண அம்சங்களுடன் கூடிய லேசர் விளக்குகளை பொருத்தி, அங்கு உள்ள சிற்பங்களின் அழகை சுற்றுலாப் பயணிகள் முழுமையாக காணும் வகையில் பொலிவூட்டப்படும். இந்து சமய அறநிலையத் துறையின் இந்த முயற்சி மதுரையின் சுற்றுலா பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் விருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை.
இதையும் படிங்க: பள்ளி மாணவர்களின் நலன் கருதி.. பள்ளிக் கல்வித் துறையின் உத்தரவு