மதுரை: தனியார் உணவு விடுதியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், “மக்களுக்கு தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மக்களுக்கு தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மக்கள் இயக்கத்தை உருவாக்க திட்டமிட்டு உள்ளோம்.
மின் கட்டண உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரையில் நவம்பர்-1ஆம் தேதி மின்கட்டண உயர்வை கண்டித்து புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
தமிழ்நாடு பல்வேறு துறைகளில் வளர்ச்சி பெற்ற மாநிலம். ஆனால், தூய்மையான மாநிலங்களில் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெற வில்லை. மது போதை போன்றவற்றுக்கு எப்படி இளைஞர்கள் அடிமையானர்களோ, அதுபோலவே தற்போது சினிமா மாயையில் சிக்கி அடிமையாகின்றனர்.
எல்லா மதங்களிலும் பல்வேறு பிரிவுகள் உள்ளன. இந்து மதத்தில் மட்டுமல்ல, கிறித்தவம், முஸ்லிம், உள்ளிட்ட எல்லா மதங்களிலும் பிரிவுகள் உள்ளன. இந்து மதத்தில் மிக முக்கியமானது உருவ வழிபாடு. திரைப்பட இயக்குனர்களுக்கு அடிப்படை தெரியவில்லை. ராஜராஜ சோழனுக்கு இந்து என்ற முத்திரையை யார் கேட்டது?
திரைப்படங்களில், அருவாள் கலாச்சாரம் உள்ளிட்ட வன்முறைக் காட்சிகள் இடம் பெறக் கூடாது என்பதற்காக புதிய தமிழகம் கட்சி பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இருப்பினும் தற்போது வருகின்ற சில திரைப்படங்கள் வன்முறைக் காட்சிகளை காண்பிக்கின்றன. ஆனால், பெருமளவில் அவைகள் குறைக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு இருக்கை தொடக்கம்