மதுரை : மதுரை பாரதிய ஜனதா கட்சியின் மாநகர் அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட விரும்புவோர்களிடம் இருந்து பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் திருவிழாவாக பாஜக இன்று நிகழ்த்தி வருகிறது. மாநகராட்சி பகுதியில் உள்ள வார்டுகளில் போட்டியிட சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாஜக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். பாஜகவில் தகுதியின் அடிப்படையில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள்.
பாஜக ஆர்ப்பாட்டம்
நாளை (நவ.22) திங்கள்கிழமை பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டி தமிழ்நாடு அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. உலக சந்தையில் விற்பனையாகும் கச்சா எண்ணெய் விலைகேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது.
இதில் மோடி அரசு தலையீடு இல்லை. குறிப்பாக சாலை போன்ற உட்கட்டமைப்பு மேம்படுத்தல் போன்ற பல கோடி செலவாகும் திட்டங்களுக்கு பெட்ரோல், டீசல் மீதான வரி மூலம் தான் சரி செய்ய முடியும்.
வேளாண் சட்டங்கள் வாபஸ்
காங்கிரஸ், திமுக ஆட்சியில் சேர்ந்துள்ள கடன் சுமையை சரி செய்வதற்கும் இதனையே நம்பி உள்ளது. மத்திய அரசு கலால் வரியை குறைத்ததால் மக்கள் அதன் பயனை அனுபவித்து வருகின்றனர்.
இன்றைக்கு 8 மாநில சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மேம்படுத்ததுவதற்கும் பெட்ரோல் டீசல் வரிகளே காரணமாக அமைகின்றன. வேளாண் சட்டங்கள் வாபஸ் பெற்றது குறித்து உரிய விளக்கம் பிரதமரால் அளிக்கப்பட்டுள்ளது. விவசாய வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்த பிரதமர் நிலம் வழங்குவது, உரம் வழங்குவது, பூச்சிக் கொல்லிகள் மானியவிலையில் வழங்கிய போதும் அனைத்திற்கும் இறுதியாக சந்தை படுத்தும் போது மட்டும் விவசாயிகள் ஏற்கவில்லை.
அதிமுக பாஜக கூட்டணி
மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் தமிழ் மொழியில் மாற்றி பயன்படுத்தினால் மக்களுக்கு எளிமையாக புரியும், மழை வெள்ளம் பாதிப்பு குறித்து மத்திய குழு ஆய்வு செய்த பின்னர் மத்திய நிதி வழங்கும், அதிகபடியான நிதி தமிழகத்திற்கு கிடைக்க வேண்டும் என்றுதான் அனைவரும் விரும்புகிறோம்.
தேர்தல் வரும் சமயத்தில் தான் கூட்டணியில் எத்தனை இடங்களில் போட்டியுடுவது குறித்து முடிவு செய்யப்படும், இன்றளவும் அதிமுக கூட்டணியில் தான் பாஜக உள்ளது.
அம்மா உணவகத்தில் கருணாநிதி படத்துக்கு கண்டனம்
கருணாநிதியின் பல திட்டங்கள் உள்ள நிலையில் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களில் கருணாநிதியின் படத்தை இணைக்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது.
இது குறித்து மாநகராட்சி அலுவலர்களுக்கு தெரியவில்லை என்றால் அலுவலர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு தொடர வேண்டும்” என்றார்.
கடமை தவறிய திமுக
தொடர்ந்து ஆடு திருடர்களை பிடிக்க சென்ற சார்பு ஆய்வாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மட்டுமின்றி, திமுக அரசு கடமை தவறி இருக்கின்றது என்பதையே காட்டுகிறது” என்று குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க : விசாரணை படத்தை விட ஜெய் பீம் பிரமாதமானதல்ல- கார்த்தி சிதம்பரம்