மதுரை: மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியராகராஜன் மற்றும் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது அமைச்சர்கள் மாணவ, மாணவியருக்கு 'வெள்ளை கோட்' அணிவித்து அவர்களை வரவேற்றனர். அதற்குப் பிறகு நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்வில், வழக்கமான, பாரம்பரிய உறுதிமொழி ஏற்காமல், மாற்றம் செய்யப்பட்ட மகரிஷி சரக் ஷபத்-தின் சமஸ்கிருத உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இது மேடையிலிருந்த அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் மற்றும் மருத்துவக் கல்லூரி பேராசிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இது குறித்து மருத்துவக் கல்வி இயக்குநரிடம் அவர்கள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும் இது தேவையற்ற சிக்கலை உருவாக்கும் எனவும் கூறினர்.
மேடையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், "தற்போது மாணவர்கள் ஏற்றுக் கொண்ட இந்த உறுதிமொழி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் மருத்துவர்கள் பின்பற்றக்கூடிய உறுதிமொழி நடைமுறையைத்தான் பின்பற்ற வேண்டும். அரசியல்வாதிகளாகிய நாங்கள் அரசு பொறுப்பேற்கும்போது, உலகம் முழுவதும் பின்பற்றப்படும் பாரம்பரிய நடைமுறையைத்தான் பின்பற்றி வருகிறோம். இதைத்தான் நானும் பரிந்துரை செய்ய விரும்புகிறேன்" என்றார்.
பிறகு பேசிய மதுரை மருத்துவக் கல்லூரி டீன் ரத்னவேல், "இந்த நிகழ்ச்சிக்கான உறுதிமொழியை மாணவர்கள் இணையத்திலிருந்து எடுத்து, எங்களுடைய கவனத்திற்கு கொண்டு வராமலேயே செய்துவிட்டனர். இதன் விளைவு தெரியாமல் செய்துவிட்டார்கள் என நினைக்கிறேன்" என்றார்.
இதையும் படிங்க: "இந்தி படித்து விட்டு பானி பூரி விற்கிறார்கள்" அமைச்சர் பொன்முடி பேச்சு