மதுரை:அரசு ஆவணங்களில் இருந்து காலனி, சேரி, குப்பம் ஆகியப்பெயர்களை நீக்கவும், ஆதிதிராவிடர்கள் வசிப்பிடங்களுக்கு புதிய பெயர் சூட்டவோ அல்லது அப்பகுதியின் பிரதான பெயரில் அழைக்குமாறோ உத்தரவிடக் கோரிய வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தது.
முன்னதாக இதேகோரிக்கை தொடர்பான மனு ஏற்கெனவே தள்ளுபடியாகி உள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேல் உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை எனக்கூறி வழக்கை முடித்து வைத்தது.
சமூக சமத்துவப் படை தலைவர் சிவகாமி, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் வகுப்பினர் வசிக்கும் பகுதிகள் காலனி, சேரி, குப்பம் என பாரபட்சமான பெயர்களில் அழைக்கப்படுகின்றன. இப்பெயர்கள் அரசு ஆவணங்கள், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டைகளிலும் அச்சிடப்பட்டுள்ளன. இதனால் தீண்டாமை கொடுமை, சாதி வன்முறைகள் அதிகரிக்கும்.
பாரபட்சமான முறையில் அடையாளங்களைக் குறிப்பிடுவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. எனவே அரசு ஆவணங்களில் இருந்து காலனி, சேரி, குப்பம் ஆகியப்பெயர்களை நீக்கவும், ஆதிதிராவிடர்கள் வசிப்பிடங்களுக்குப் புதிய பெயர் சூட்டவோ அல்லது அப்பகுதியின் பிரதானப்பெயரில் அழைக்குமாறோ உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அரசுத்தரப்பில், இதே கோரிக்கை தொடர்பான மனு ஏற்கெனவே தள்ளுபடியாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மேல் உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை எனக்கூறிய நீதிபதிகள் மனுவை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க:தனியார் மருத்துவ கல்லூரிகள் கட்டண உத்தரவை மறு ஆய்வு செய்ய உத்தரவு