திண்டுக்கல்: வத்தலகுண்டைச் சேர்ந்த கார்த்திக் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், "எங்களது கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் வரும் வைகாசி மாதம் ஊர் மக்கள் அனைவரும் இணைந்து திருவிழா நடத்துவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் 26.05.2022 முதல் 28.05.2022 வரை திருவிழா கொண்டாடவும், திருவிழாவில் பூஜை மற்றும் அபிஷேகத்திற்குப் பிறகு 'சேவல் சண்டை விளையாட்டு' நடத்த திட்டமிட்டுள்ளோம்
மேலும் ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாவை எங்கள் ஊர் மக்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சனையின்றி அமைதியான முறையில் "சேவல் சண்டை விளையாட்டை" நடத்தி வருகின்றோம். திருவிழாவில் "சேவல் சண்டை" நடத்த அனுமதி கோரி வத்தலகுண்டு காவல் ஆய்வாளரை அணுகி 18.04.2022 அன்று மனு ஒன்றினை அளித்தேன். ஆனால், தற்போது வரை எனது மனுவை பரிசீலனை செய்யவில்லை.எனவே, திருவிழாவில் "சேவல் சண்டைக்கு" அனுமதியும், பாதுகாப்பும் வழங்குமாறு உத்தரவிட வேண்டும்." என மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வத்தலகுண்டு காவல் துறையிைனர் தரப்பில், சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, வத்தலக்குண்டு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் சேவல் சண்டை நடத்த அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், மனுதாரரின் மனுவினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்
மேலும், தேவைப்பட்டால் மனுதாரர் வத்தலகுண்டு காவல்துறையினர் சேவல் சண்டை போட்டிக்கான அனுமதியை நிராகரித்த உத்தரவை எதிர்த்து புதியமனுவை தாக்கல் செய்யலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:தொடங்கியது பழமை வாய்ந்த பூலாம்வலசு சேவல் சண்டை