ராஜபாளையத்தை சேர்ந்த மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பாக ராமராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், " ராஜபாளையத்தில் உள்ள வழிவிடு விநாயகர் கோயிலில் 33 வருடங்களாக மாப்பிள்ளை விநாயகர் மன்றம் சார்பாக விநாயகர் சதுர்த்தி மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கரோனா தொற்றின் காரணமாக இந்த வருடம் தமிழ்நாடு அரசு பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து கொண்டாடவும் கூட்டமாக நீர்நிலைகளில் சென்று கரைக்கவும் அனுமதி மறுத்துள்ளது.
வழிவிடு விநாயகர் கோயிலில் 6 விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு அதை தனி நபராக டிராக்டரில் தனித்தனியாக ஒவ்வொன்றாக டிராக்டர் மூலம் எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கவேண்டும்.
மேலும் அரசின் கரோனா தொற்று பாதுகாப்பு அனைத்து கட்டுப்பாடுகளையும் பின் பற்றி முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம் என்றும் எந்த வித கூட்டமும் சேராமல் பாதுகாப்பு விதிமுறை களை பின்பற்றி கோயில் உள்ள சிலைகளை மட்டும் எடுத்துச்சென்று கரைப்பதற்கு அனுமதித்து உத்தரவிட வேண்டும்" என ராமராஜ் மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விநாயகர் சதுர்த்தி முடிந்து விட்டது. சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏதுமில்லை. கரோனா விதிகளை அரசு பல்வேறு தளர்வுகளுடன் அறிவித்துள்ளது.
எனவே கரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி நாங்களே எடுத்துச் சென்று சிலையை கரைக்க அனுமதிக்க வேண்டும் என வாதிட்டனர்.
இதனை பதிவு செய்த நீதிபதி, விநாயர் சிலைகளை மயூரநாதன் கோயிலின் செயல் அலுவலர் கட்டுபாட்டில் கரோனா தொற்று தடுப்பு விதிகளை பின்பற்றி விநாயகர் சிலைகளை எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைத்துக்கொள்ளலாம். அறநிலையத்துறையினர் இதற்க்கு தேவையான காவல்துறை பாதுகாப்பு பெற்று கொள்ளலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: கொடைக்கானல் போட் கிளப் அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவு