மதுரை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த அனைத்து துறைகள் ஒருங்கிணைப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் வினய், 'தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் கொரோனா வைரஸ் குறித்து பாதிப்பு எதுவும் இதுவரை இல்லை. இருப்பினும் முதலமைச்சரின் ஆணைக்கிணங்க அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
அதன்படி சிங்கப்பூர், இலங்கை, துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்காக 24 மணிநேரமும் கொரோனா வைரஸ் தடுப்பு முகாம் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றது. இதுவரை மதுரை வந்த 13 ஆயிரத்து 432 பயணிகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 69 பேர் சீனாவில் இருந்து வந்தவர்கள் ஆவர். ஆனால் இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் சிகிச்சை தனிப்பிரிவு இயங்கி வருகின்ற காரணத்தால் சந்தேகப்படக் கூடிய வகையில் உள்ள பயணிகள் இங்கு அழைத்து வரப்பட்டு 14 நாட்கள் முழு கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனர்.
தற்போது நம்மிடம் போதுமான அளவிலான கொரோனா வைரஸ் தடுப்பு உபகரணங்கள் உள்ளன. சுகாதாரத்துறை எந்நேரமும் கண்காணிப்பில் இருக்கும் வகையில் உஷார் படுத்தப்பட்டுள்ளது. நமது நாட்டில் கொரோனா பாதிப்பு ஏற்பட பெரிய சாத்தியமில்லை என்றாலும் பொதுமக்கள் பொதுவெளியில் சுகாதாரமான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்' என்றார்.