மதுரை: தமிழ்நாடு அஞ்சல்துறையில் இந்திக்காரர்களைப் பணியமர்த்தும் முடிவைக் கைவிட வலியுறுத்தி தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல் துறைத் தலைவர் அலுவலகம் கடந்த மார்ச் 30ஆம் நாளிட்டு வெளியிட்டுள்ள புதிய ஊழியர் சேர்ப்புப் பட்டியலில் 946 பெயர்கள் உள்ளன. இவர்கள் தமிழ்நாட்டில் எந்தெந்தக் கோட்டத்தில் எந்தெந்த அலுவலகத்தில் பணியில் சேர வேண்டும் என்ற விவரங்களும் அதில் உள்ளன. 946 பெயர்களில் ஒரு பெயர்கூடத் தமிழ்நாட்டுப் பெயராக இல்லை. எல்லாம் வடநாட்டுப் பெயர்கள்.
மயிலாடுதுறையில் போராட்டம்: இப்பட்டியலில் உள்ள வடநாட்டினர் இப்போதுதான் பணி ஏற்று வருகிறார்கள். தமிழ்நாட்டில் தமிழர்களை நூற்றுக்கு நூறு புறக்கணித்து, வடநாட்டுக்காரர்கள் சற்றொப்ப 20 பேர் மயிலாடுதுறை அஞ்சல் அலுவலகங்களில் சேர்க்கப்பட்டதை அப்பகுதி மண்ணின் மக்கள் உரிமை கோரும் உணர்வாளர்கள் அறிந்தவுடன் ஏப்ரல் 28ஆம் தேதி மயிலாடுதுறை அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பாக இந்த அநீதியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு அஞ்சல் கண்காணிப்பாளரிடம் மனுவும் கொடுத்துள்ளார்கள்.
அம்மனுவில் வேலையில்லாமல் தவித்து அஞ்சல் பணிக்காகத் தேர்வு எழுதி லட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்கள் காத்திருக்கும்போது, முழுக்க முழுக்கத் தேர்வு செய்யப்பட்ட வடமாநிலத்தவர் யாருக்கும் பணி கொடுக்கக்கூடாது என்றும் இதுகுறித்து உயர்நிலை விசாரணை நடைபெற வேண்டும் என்றும் கோரியுள்ளார்கள். சமூக ஆர்வலர்கள் மற்றும் மயிலாடுதுறை வளர்ச்சிக் குழு சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பேராசிரியர் இரா. முரளிதரன் தலைமை தாங்கியுள்ளார். வழக்கறிஞர் வேலு. குபேந்திரன், தமிழ் கணேசன், சீர்காழி அரவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளார்கள்.
![தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ மணியரசன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-mdu-01-postel-dept-hindi-pemaniarasan-script-7208110_28042022223408_2804f_1651165448_126.jpg)
திட்டமிட்டு புறகணிப்பு: தமிழ்நாட்டின் அஞ்சல் துறை, தொடர்வண்டித் துறை, நெய்வேலி அனல் மின் நிலையம், துறைமுகங்கள், வானூர்தி நிலையங்கள் உள்ளிட்ட இந்திய அரசு நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் அனைத்திலும் தகுதியுள்ள தமிழ்நாட்டு இளைஞர்களை திட்டமிட்டுப் புறக்கணித்துவிட்டு, வடநாட்டவர்களுக்கு வேலை வழங்கும் இனப்பாகுபாடு பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. மேற்படி, பணிகளுக்கான தேர்வில் ஆள்மாறாட்டம் செய்வது, போலிச் சான்றிதழ் கொடுத்து வேலையில் சேர்வது போன்ற மோசடிகள் தமிழ்நாட்டில் பலமுறை அம்பலமாகி உள்ளன. அவ்வாறான வடநாட்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டு வழக்குகள் நடக்கின்றன.
மொழிவாரி மாநில கொள்கைக்கு எதிராக...: தொழில், வணிகம், வேலைவாய்ப்பு போன்ற பொருளாதார வளர்ச்சி நடவடிக்கைகளில் அந்தந்த மொழித் தாயகத்தில் அந்தந்த மொழி மாநிலத்தவர்க்கு முன்னுரிமையும் முழு வாய்ப்பும் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அந்த நோக்கத்திற்கு முற்றிலும் எதிராக தமிழ்நாட்டில் இந்திய அரசுத் துறைகளில் தமிழர்களைப் புறக்கணித்து, வடநாட்டு இந்தி மாணவர்களை முறையற்ற வழிகளில் இந்திய அரசு திணிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இந்திய அஞ்சல் துறையில் மார்ச் 30ஆம் தேதியிட்ட தமிழ்நாடு முதன்மைத் தலைமை அஞ்சல்துறைத் தலைவர் வெளியிட்டுள்ள பணி அமர்த்த ஆணையைத் திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் துறை அலுவலகங்கள் அனைத்திலும் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கு வழங்க வேண்டும். வடநாட்டவரைத் திணிப்பதைக் கைவிட வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழர்களின் வாழ்வுரிமை பறிபோகும் இந்த அநீதியைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: குரூப் 4 எழுத்து தேர்வு - பெண்கள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பம்